சுகர் இருந்தால் பேச்சு குளறுமா..? அதிர்ச்சி தரும் மருத்துவரின் பதில்..!
ரத்த சர்க்கரை அளவு மிகுதியாக இருக்கின்ற டைப்-2 டயபடீஸ் குறித்து மக்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு, குறைவான சர்க்கரை அளவை கொண்ட ஹைபோகிளைசீமியா குறித்து இருப்பதில்லை. ஆனால், அதிக சர்க்கரை அளவைக் காட்டிலும் உடனடி அபாயங்களை கொண்டது ஹைபோகிளைசீமியா தான்.
நடுக்கம், வியர்வை, குழப்பம் மற்றும் நிதானம் இழப்பு போன்றவை ஹைபோகிளைசீமியாவின் அறிகுறிகள் ஆகும். அதேபோல பேச்சில் தடுமாற்றும், குளறுபடி ஏற்படுவதும் ஹைபோகிளைசீமியாவின் அறிகுறி தான். இதுகுறித்து மூத்த மருத்துவ நிபுணர் பவண் குமார் கோயல் கூறுகையில், “மிக, மிக குறைவான சர்க்கரை அளவைக் கொண்டதாக ஹைபோகிளைசீமியா இருக்கும் பட்சத்தில் குழப்பம், மங்கலான பார்வை அல்லது உணர்வின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சிலர் கோமா நிலைக்கு கூட சென்று விடுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “மூளையின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை குளுகோஸ் அல்லது சர்க்கரை தான் வழங்குகிறது. இந்த நிலையில் ரத்த குளுகோஸ் அளவு குறைந்தால் மூளை முறையாக செயல்பட முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதனால், நரம்பியல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.
குறைவான ரத்த சர்க்கரை அல்லது ஹைபோகிளைசீமியா நோய்க்கு சிகிச்சை எடுக்காவிட்டால், அந்த நோயாளி கோமா நிலைக்கு சென்று விடுவார். உயிருக்கும் கூட அது ஆபத்தாக முடியும்’’ என்று கூறினார்.
சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரான ஜிம்மி பதக்கும் இதே கருத்தை தெரிவித்தார். மூளைக்கு ஆற்றல் வழங்குவதில் குளுகோஸ் சத்துக்கு பெரும் பங்கு இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து பேசுகையில், “குளுகோஸ் சத்தை மூளை நீண்ட நேரத்திற்கு சேமித்து வைக்க முடியாது. இதனால் மூளைக்கு குளுகோஸ் விநியோகம் தொடர்ந்து நடைபெற வேண்டும். குளுகோஸ் அளவுகள் குறைந்தால் அது மூளையின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் மற்றும் பேச்சு குளறுபடி ஏற்படும்’’ என்றார்.
நீரிழிவு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் இன்சுலின் ஆகியவை மிகுதியாகும் பட்சத்தில் இதுபோன்று ஹைபோகிளைசீமியா பிரச்சினை ஏற்படலாம். கல்லீரல் நோய், சிறுநீரக நோய், மது, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை காரணமாகவும் சர்க்கரை அளவு குறையலாம்.
தீர்வு
நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும் மற்றும் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில் பழங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் உட்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை அளவுக்கு தகுந்தாற்போல மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டும். சாப்பாட்டை தவிர்க்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. ரத்த சர்க்கரை அளவு திடீரென்று குறைந்து மயக்கம் வருகிறார்போல இருந்தால் அதை சமாளிக்க கையில் மிட்டாய், இனிப்பு போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.