இந்த முறை சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க… குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!
அசைவம் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிக்கன் தான். ஏனென்றால், நம்மில் பலர் சிக்கன் பிரியர்கள். சிக்கன் சாப்பிட ஆசை வந்தால், உடனே கடைக்கு சென்று அரை கிலோ சிக்கன் வாங்கி.. சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவோம். ஆனால், எப்போதாவது சிக்கனை வைத்து புதிதாக ஏதாவது ட்ரை செய்ய நீங்க யோசித்தது உண்டா?…
இந்த முறை சிக்கன் வைத்து ஏதாவது புதிதாக சமைக்க விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். கோழி இறைச்சியுடன் பால் மற்றும் மசாலா பொருட்கள் சிலவற்றை சேர்த்து காரசாரமான ஜிஞ்சர் சிக்கன் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1 கிலோ.
தக்காளி – 4.
பால் – 250 கிராம்.
மஞ்சள் – 1/4 ஸ்பூன்.
மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்.
கொத்தமல்லி விதைகள் – 1 ஸ்பூன்.
இஞ்சி – 100 கிராம்.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி மற்றும் இஞ்சியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் பாலுடன் தக்காளி, இஞ்சியை சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
இதனிடையே, எடுத்துக்கொண்ட சிக்கன் துண்டுகளை மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி வைக்கவும்.
தற்போது, ஜிஞ்சர் சிக்கன் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்த பின் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றையும் சேர்த்து 4 – 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
இதை தொடர்ந்து மிக்ஸியில் அரைத்து வைத்த பால் – தக்காளி சேர்மத்தை அதில் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
தொடர்ந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இந்த சிக்கன் சேர்மத்தை கொதிக்க வைக்கவும். சேர்மம் அரை திடமாக மாறும் நிலையில் அடுப்பில் இருந்து இறக்க ஜிஞ்சர் சிக்கன் தயார்.
காரசாரமான இந்த ஜிஞ்சர் சிக்கனை சாதம், ரொட்டி என உங்களுக்கு பிடித்தமான உணவுகடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.