ஆரோக்கியம்உறவுகள்தாய்மை-குழந்தை பராமரிப்புமருத்துவம்
வேலை செய்யும் பெண்கள் கர்ப்ப காலத்தை எப்படி சமாளிக்கலாம்..? செய்யவேண்டியவை.. செய்யக்கூடாதவை..!
முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்களே அலுவலக வேலைக்குச் சென்று திரும்பும்போது ஆற்றலை இழந்து களைத்துப்போய் காணப்படுவார்கள். அப்படியிருக்கு கர்ப்பிணியாக இருக்கும் பெண்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருபக்கம் கர்ப்பம் காரணமாக ஏற்படுகின்ற காலைநேர சோர்வு, எண்ண தடுமாற்றங்கள், பசி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கும்.
மற்றொரு பக்கம், அலுவலகத்தில் பணி நெருக்கடி, இறுதிக்கெடு போன்ற விஷயங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில் இயல்பு வாழ்க்கையையும், அலுவலகப் பணிகளையும் சுமூகமாக நகர்த்திச் செல்வது பெரும் சவாலான விஷயம் தான். ஆனால், வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படும் கர்ப்ப காலத்தில் அழகானதாகவும், ஸ்ட்ரெஸ் இல்லாமலும் கொண்டு செல்ல வேண்டுமல்லவா. ஆக, பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கவும் : கர்ப்பமாக இருப்பதை சொல்ல தயக்கம் வேண்டியதில்லை. மகிழ்ச்சியான இந்த தகவலை உங்கள் நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான சௌகரியங்களை அவர்கள் செய்து கொடுப்பார்கள். குறிப்பாக, பணி நேரம், பணிச்சுமை போன்றவை உங்களுக்காக குறைக்கப்படலாம். வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.
அவ்வபோது ஓய்வு : ஒரே இடத்தில் அமர்ந்து, நீண்ட நேரம் பணி செய்து கொண்டிருந்தால் அதன் காரணமாக உங்கள் உடல்நலன் பல வகைகளில் பாதிக்கப்படலாம். ஆகவே, அவ்வபோது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் மனதில் குழப்பங்கள் எதுவும் இருப்பின் அதற்கு தெளிவு கிடைக்கும். ஓய்வின்றி பணி செய்து கொண்டே இருந்தால் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும் மற்றும் சோர்வு ஏற்படும்.
தினசரி உடற்பயிற்சி : கர்ப்ப காலத்தில் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும். அதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் கை கொடுக்கும். அன்புக்குரிய நபர்களுடன் நீண்ட நேரம் செலவழிப்பதும் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். காலை, மாலை வேளைகளில் சிறிது நடைபயிற்சி செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கடினமான பயிற்சிகளை செய்யக் கூடாது.
நீர்ச்சத்து அவசியம் : திடீர் சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க எப்போதுமே உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் மட்டும்தான் அருந்த வேண்டும் என்பதில்லை. இளநீர், மோர், பழச்சாறுகள் என இயற்கையான பானங்களையும் எடுத்துக் கொள்ளலாம். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்கவும்.
குமட்டும் உணவுகள் வேண்டாமே : உங்களுக்கு குமட்டல், வாந்தி ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தவிர்த்து விட வேண்டும். கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே வாய் கசப்பு உணர்வு மிகுந்ததாகவும், குமட்டல் உணர்வு கொண்டதாகவும் இருக்கும். எலுமிச்சை பழம், மாங்காய் போன்ற புளிப்பான உணவுகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஆற்றல் இழப்பு ஏற்படும்போது அதை ஈடுகட்ட ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.