பீரியட்ஸ் நேரத்தில் உதிரபோக்கு துர்நாற்றமா… இதை ஃபாலோ பண்ணுங்க கண்ட்ரோல் ஆகும்!
மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியம். மாதவிடாய் காலம் என்பது கருவுறாத முட்டை, இரத்தம் மற்றும் கருப்பையின் புறணி திசுக்கள் உதிர்ந்து இரத்தமாய் வெளியேறுவதாகும். இரத்த பிறப்புறுப்பை விட்டு வெளியேறும் போது துர்நாற்றம் உண்டாகிறது. சில பிறப்புறுப்பு தொற்றுகளால் கூட துர்நாற்றம் என்பது அதிகமாக இருக்கும். காரணம் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த பகுதியின் அமிலத்தன்மையை மாற்றி துர்நாற்றத்தை வீசச் செய்கிறது.
ஒரு ஆரோக்கியமான மாதவிடாயின் போது இரும்பு மற்றும் உலோக வாசனை இருக்கத்தான் செய்யும். இருப்பினும் மாதவிடாய் இரத்தம் பல்வேறு வாசனைகம் உண்டாகும் போது எப்படி போக்கலாம் என அறிந்து கொள்வோம்.
மாதவிடாய் துர்நாற்றம்
உலோக வாசனை :
மாதவிடாய் இரத்தத்தில் இரும்புச் சத்து இருப்பதால் நீங்கள் உலோக வாசனையை உணரலாம். இந்த வாசனை மாதவிடாய் முடிந்த பிறகு கூட நீடிக்க வாய்ப்பு உள்ளது. இலேசானது முதல் மிதமான வரையில் இந்த நாற்றம் இருக்கலாம்.
அழுகிய மணம் :
மாதவிடாய் இரத்தத்தில் பாக்டீரியாவுடன் இரத்தம் மற்றும் திசுக்கள் கலந்து வெளியேறும் போது இந்த அழுகிய வாசனை உண்டாகிறது. மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் டேம்பான்களை நீண்ட நேரம் அகற்றாமல் விட்டால் இந்த மாதிரியான வாசனை உண்டாக வாய்ப்புள்ளது.
மீன் வாடை :
இது ஒரு வலுவான வாசனை ஆகும். மீன் வாசனை ஏற்படுவது பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியல் வஜினோசிஸ் இருப்பதை குறிக்கிறது. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், இரத்தப் போக்கு அல்லது அரிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
மாதவிடாய் துர்நாற்றத்தை போக்க சுகாதாரம்
மாதவிடாய் இரத்தம் மீன் போன்ற துர்நாற்றத்தில் இருந்தால் நாப்கின்கள் மற்றும் டேம்பன்களை உடனே மாற்ற வேண்டும். மாதவிடாய் காலங்களில் சுகாதாரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு 4-5 மணி நேரத்துக்கு நாப்கின்கள் மற்றும் டம்பான்களை மாற்ற வேண்டும்.
உதிரபோக்கு இருந்தால் தான் நாப்கின் மாற்ற வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் நாப்கினை மாற்ற வேண்டும். இளவயது பெண்கள் கல்லூரி பணியிடங்களில் நாப்கின் மாற்றுவதில்லை. இவர்களுக்கு இந்த மீன் போன்ற துர்நாற்றத்துடன் கூடிய இரத்தப்போக்கு உண்டாகலாம்.
மாதவிடாய் துர்நாற்றத்தை போக்க சிறுநீரை அடக்க கூடாது
நாப்கின் மாற்ற வேண்டும்என்னும் சோம்பலில் அதிக நேரம் சிறுநீர் அடக்கி வைக்கும் பெண்கள் உதிரபோக்கு நாற்றத்துடன் பிற்பாடு ரேஷஷ், சிறுநீர்த்தொற்று, பிறப்புறுப்பு தொற்று பிரச்சனையையும் எதிர்கொள்ளும் அபாயம் உண்டு. .
ஒவ்வொரு முறை பாத்ரூமிற்கு செல்லும் போதும் பிறப்புறுப்பை வெற்று நீரில் சுத்தமாக கழுவ வேண்டும். வாசனை திரவியங்கள், சோப்புகள் பயன்படுத்த கூடாது.
மாதவிடாய் துர்நாற்றம் குறைய நாப்கின் பயன்பாடு
உதிரபோக்கு அதிகமாக உள்ளது என்று சிலர் ஒரே நேரத்தில் இரண்டு நாப்கின்கள் பயன்படுத்துவது உண்டு. அதை தவிர்க்க வேண்டும். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்களும் உண்டாக வாய்ப்புள்ளது.
நீண்ட நேரம் வியர்வை உள்ளாடையுடன் இருப்பதை தவிருங்கள். காலை மாலை இருவேளையும் உள்ளாடையை மாற்றுங்கள். மாதவிடாய் காலங்களில் உடற்பயிற்சி செய்யாமல் போதுமான ஓய்வு எடுக்க வேண்டும் மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பு முடிகளை நீக்க ரேசரை பயன்படுத்த வேண்டாம்.
மாதவிடாய் துர்நாற்றம் குறைய இருமுறை குளியல்
மாதவிடாய் சுகாதாரத்தை பராமரிக்கவும், மாதவிடாய் துர்நாற்றத்தை போக்கவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். குளிக்கும் போது வெந்நீரை பயன்படுத்துவது மாதவிடாய் வலிகளை போக்க பயன்படுகிறது.
பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யும் போது முன்னிருந்து பின்னமாக சுத்தம் செய்ய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வியர்வையை உறிஞ்சும் பருத்தியால் ஆன காற்றோட்டமான உள்ளாடைகளை அணியுங்கள்.
மாதவிடாய் துர்நாற்றம் குறைய மாதவிடாய் கப்களை பயன்படுத்துங்கள்
மாதவிடாய் காலங்களில் நாப்கின் பயன்படுத்தினால் சீரானை இடைவெளியில் மாற்றுங்கள். அல்லது டேம்பன்கள் மற்றும் மாதவிடாய் கப்களை மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான அளவில் பயன்படுத்துங்கள். இவை நாப்கினை காட்டிலும் நீண்ட நேரம் 10-12 நேரம் வரை பயன்படுத்த முடியும்.
சரியான முறையில் பயன்படுத்தினால் பாதுகாப்பானது. இது பிறப்புறுப்பின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் துர்நாற்றமும் இருக்காது.
மாதவிடாய் துர்நாற்றம் குறைய வாசனைப் பொருட்கள் வேண்டாம்
உதிரப்போக்கு துர்நாற்றம் குறைய பிறப்புறுப்பு பகுதியில் வாசனை திரவியங்கள் மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவது உங்களுக்கு எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால் வெற்று நீர் அல்லது மிதமான வெந்நீர் கலந்து கழுவினால் போதுமானது.
மேலும் உள்ளுக்கு நீரேற்றமாக இருக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்த பிறகும் மாதவிடாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.