உலக நடப்புகள்புதியவை

சிறந்த மற்றும் மோசமான தூக்க நிலைகள்

சிறந்த மற்றும் மோசமான தூக்க நிலைகள்

1. மல்லார்ந்த நிலை:

படுக்கையில் முதுகு பகுதியை நேராக வைத்த நிலையில், முகத்தை மேல் நோக்கி பார்த்த நிலையில் தூங்கும் இந்த நிலையை பலரும் கடைப்பிடிப்பார்கள். இது முதுகெலும்பு, கழுத்து மற்றும் தோள்களை நேர் நிலையில் ஒழுங்கமைப்பதற்கு உதவும். ஆனால் முதுகுவலி, குறட்டை பிரச்சினை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பாதிப்பை எதிர்கொள்பவர்களுக்கு இந்த தூக்க நிலை சரியானதல்ல.

2. பக்கவாட்டு நிலை:

உடலை ஒரு பக்கமாக திருப்பி படுக்கும் நிலை இது. இந்த முறையில் இடது பக்கம் தூங்குவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். மூட்டு வலி, கீழ் முதுகு வலி, நாள்பட்ட வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளை குறைக்க உதவும். அதனால் இது சிறந்த தூக்க நிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனை ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த தூக்க நிலை மூளையின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படவும் உதவும்.

3. குப்புற படுக்கும் நிலை:

இந்த முறையில் தூங்குவது வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்கும். கழுத்து, முதுகு, முதுகு தண்டுவடம் போன்ற பகுதிகளில் வலியை உண்டாக்கும். அதனால் இந்த தூக்க நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை. உடலின் எடை நடுப்பகுதியில் குவிந்திருக்கும் என்பதால் தூங்கும்போது முதுகு தண்டுவட பகுதியை சீராக பராமரிக்க உடல் அனுமதிக்காது. தலை மற்றும் முதுகுத்தண்டு வடம் சீராக இல்லாதபோது கழுத்தில் அழுத்தம், காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

4. கருப்பை குழந்தை நிலை:

கருவில் வளரும் குழந்தையை போல சுருண்ட நிலையில் தூங்கும் முறை இது. அவ்வாறு தூங்கும்போது உடல் பக்கவாட்டில் சுருண்டு முதுகுத்தண்டு பகுதியில் இயற்கையான வளைவை உருவாக்கும். இந்த நிலை கீழ் முதுகு வலி பாதிப்புக்கும், கர்ப்பத்திற்கும் சிறந்தது. இருப்பினும் உடலை மிகவும் இறுக்கமாக சுருட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு சுருண்ட நிலையில் தூங்கும்போது மூட்டுகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். சுவாசத்திற்கு இடையூறு உண்டாகலாம். ரத்த ஓட்டம் தடைபடலாம். பின்னாளில் கடுமையான உடல்நல பிரச்சினைகளும் ஏற்படலாம்.

ஒவ்வொரு தூக்க நிலையும் நன்மை, தீமைகளைக் கொண்டுள்ளது. எல்லோரும் ஒரே நிலையில் தூங்க முடியாது. உடலின் தன்மை, சவுகரியத்தை பொறுத்து தூக்க நிலையை பின்பற்ற வேண்டியிருக்கும். இருப்பினும் அந்த தூக்க நிலை சரியானது தானா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான மெத்தை, தலையணையை தேர்ந்தெடுப்பது சிறந்தது. படுக்கையறையை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியமானது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker