கறி சுவையை மிஞ்சும் முட்டை சுக்கா – 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
கறி சுவையை மிஞ்சும் முட்டை சுக்கா - 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
முட்டை – 4,
கடுகு – அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
கறிவேப்பிலை ஒரு கொத்து,
தக்காளி – 2,
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்,
மல்லி தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத் தூள் – அரை டீஸ்பூன்,
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்,
கரம் மசாலா – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிதளவு.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ளுங்கள். அதன் பின் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு தூள் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு முட்டையை அடித்து கலக்க வேண்டும்.
இதை ஒரு சிறிய வாயகன்ற கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாற்றிக் கொள்ள வேண்டும். இட்லி அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீருக்குள் ஒரு ஸ்டாண்ட் போல ஏதாவது ஒன்றை வைத்து அதன் மீது நீங்கள் இந்த முட்டை ஊற்றிய கிண்ணத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக மூடி போட்டு 15 நிமிடம் அளவான தீயில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரை வதங்கி வந்ததும், ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகிய எல்லா மசாலாக்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடிப்பிடிக்க விடாமல் லேசாக வதக்கிய பிறகு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். கடைசியாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு நீங்கள் வேக வைத்து எடுத்த முட்டைகளை ஒரு இன்ச் அளவிற்கு சதுர சதுரமாக வெட்டி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
முட்டைக்குள் மசாலா இறங்கும் வரை ஒரு இரண்டு நிமிடம் பிரட்டி விட்டு கொண்டே இருங்கள். தண்ணீர் வற்றி முட்டையுடன் மசாலா ஒன்றுடன் ஒன்றாக சுக்கா போல வந்துவிடும். பிறகு கொத்தமல்லி தழைகளை நறுக்கி சேர்த்து சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான்.