வயதானாலும்… இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்..
அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள். அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவை. தண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.
உடல் எடையில் கவனம்
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது. உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.
மன நலம் காப்போம்
தேவையற்ற மன அழுத்தமும் சரும பொலிவுக்கு எதிரியாக மாறிவிடும். மனதில் ஏதேனும் குழப்பங்கள் குடி கொண்டிருந்தால் அதன் தாக்கம் முகத்திலும் எதிரொலிக்கும். பொலிவும் மங்கிவிடும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுடன், வாரம் ஒருமுறை சிறிதளவு எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வரலாம். தினமும் தியானம் செய்து வருவதும் மனதை புத்துணர்வாக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் வெளித்தோற்றமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* உருளைக்கிழங்கை சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி,15 நிமிடம் உலரவிட்டு, பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கும்.
* தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி, குளித்து வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறும்.
* புதினா இலையை விழுதாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் கடலை மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசிவிட்டு, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். ‘பளிச்’ தோற்றத்தையும் பெறலாம்.
* ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச்சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து குழைத்து முகத்தில் பூசினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்.
* கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பூசி வர முகச் சுருக்கம் நீங்குவதுடன் முகம் பொலிவுறும்.
* அதிக அளவில் மேக்கப் செய்து கொள்ளாமல், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் மூலம் இளம் வயதில் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தவிர்க்கலாம்.