உறவுகள்உலக நடப்புகள்புதியவை

காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..

காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..

காதல் தோல்விக்கு கண்ணீர் ஒருபோதும் தீர்வல்ல..
* ‘கல்லூரியில் மூன்று வருடங்கள் எப்படி கடந்துபோனது என்றே தெரியவில்லை. சக மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் எங்கள் காதலை பார்த்து வியந்தார்கள். ஒரே வகுப்பில் நாங்கள் படித்ததால், ஒருபோதும் பிரிந்ததில்லை. ஒருமுறை கூட நாங்கள் சண்டையிட்டதும் இல்லை.

அவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்த எங்கள் காதல், கல்லூரியின் இறுதி நாளில் முடிந்துபோய்விட்டது. அன்று ஆசைகள் உந்தித்தள்ள அவன் முன்னால் போய் நின்றேன். அவன் என் காதலுக்கு சமாதி கட்டிவிட்டான். ‘நாம் மூன்று வருடங்களை ஜாலியாக கடந்துவிட்டோம். கல்லூரியே நம்மை ஆழமான காதலர்கள் என்று நம்பிவிட்டது. ஆனால் நமக்குள் இருந்தது வெறும் நட்புதான். மற்ற மாணவிகளிடம் பழகியதைப் போலவே உன்னிடமும் நான் தோழமையுடன்தான் பழகினேன்’ என்று அவன் சொன்னபோது, என் கண்களில் பொங்கிவந்த கண்ணீரை அவன் எப்படி அறிவான்?’ என்று சொன்ன அவளால் கல்லூரி வாழ்க்கை முடிந்து, வேலைக்கு சென்ற பிறகும் அந்த ‘காதல் தோல்வி’ தந்த கவலையில் இருந்து மீளமுடியவில்லை.

‘எல்லோரும் எனக்கு இளம் வயதிலே அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டதாகவும், நான் கொடுத்துவைத்தவள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். என்னை திருமணம் செய்துகொள்ளவும் எங்கள் ஊரில் உள்ள வசதியான குடும்பத்தினர் சிலர் போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு எதிலுமே ஆர்வமில்லை. எதிர்காலத்திலும் நம்பிக்கை இல்லை. இப்போதும் கண்ணீரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ என்று கண்கலங்கினாள், அவள்.

* ‘வெளிமாநிலத்தில் இருந்து வந்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். அந்த நிறுவனத்தில் இன்னொரு துறையில் எனக்கு சமமான பொறுப்பில் பணிபுரிந்துவந்த இளைஞரை காதலித்தேன். இருவரும் சினிமாவிற்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்றதுண்டு. அவரை நான் காதலிப்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறேன். திருமணம் செய்துகொள்ள விரும்புவதையும் பட்டும்படாமலும் சொல்லியிருக்கிறேன்.

இந்த நிலையில் எனக்கு என் சொந்த மாநிலத்தில் வரன் தேடத் தொடங்கினார்கள். இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று கருதிய நான் என் காதலரிடம், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள லாம் என்று சொல்ல விரும்பினேன். நான் சொல்லப்போவதை முன்னதாகவே தெரிந்துகொண்ட அவர் முந்திக்கொண்டு, ‘எனக்கு ஊரில் பெண்பார்த்து பேசி முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு நானும் சம்மதித்துவிட்டேன். நீயும் உன் வீட்டில் ஏற்பாடு செய்யும் நபரை திருமணம் செய்துகொள். திருமணத்திற்கு பிறகும் நமது நட்பு தொடரவேண்டும்’ என்று கூறினார்.

ஒரே நிமிடத்தில் அவரால் என்னை தூக்கி எறிந்துவிட முடிந்தது. ஆனால், இது நடந்து நான்கு வருடங்கள் ஆன பின்பும் என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் எந்த காதல் ஜோடியை பார்த்தாலும் உடனே அவர் நினைவு வந்து நான் அழுதுவிடுகிறேன்’ என்றாள்.

இவர்கள் இருவரும் மட்டுமல்ல, இன்னும் நிறைய பெண்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால் அதையே நினைத்து காலம் முழுக்க கண்ணீர் விடவும் தயாராக இருக்கிறார்கள். காதல் தோல்விக்கு சில வருடங்கள் துக்கம் அனுஷ்டிப்பதுபோன்று நல்ல விஷயங்கள் எதிலும் அவர்கள் கலந்துகொள்வதில்லை. மகிழ்ச்சியாக இருப்பதில்லை. பார்க்கும் வேலையிலும் முன்னேற்றத்தை நோக்கிச்செல்வதில்லை. தங்கள் வளர்ச்சிக்கு அவர்களே தடைவிதித்துக்கொள்கிறார்கள்.

கவுன்சலிங்கில் கண்ணீர்விட்ட அந்த இரண்டு பெண்களிடமும் நான், ‘நீங்கள் இருவரும் காதலில் தோல்வியடைந்தது மூலம் வாழ்க்கையில் சிறந்த அனுபவத்தை பெற்றிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனது அந்த அனுபவத்தை உணர்ந்து கொள்ளாமல் வருந்திக்கொண்டிருக்கிறது’ என்றதும், என்னை வியப்புடன் பார்த்தார்கள்.

“நீங்கள் படிப்பில் தோல்வியடைந்தால் அதை ‘பெயில்’ என்று உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் ஆரோக்கியத்தில் தோல்வியடைந்தால், அதை ‘நோய்’ என்று உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறது. பணவிஷயத்தில் தோல்வியடைந்தால் ‘பணக்கஷ்டம்’ என்று உங்கள் மனது ஏற்றுக்கொள் கிறது. இப்படி நீங்கள் எந்த துறையில் தோல்வியடைந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதை ஒரு அனுபவபாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்து வெற்றியை நோக்கிச்செல்லும் அளவுக்கு தயாராகிவிடுகிறீர்கள். ஆனால் காதலில் தோல்வி யடைந்தால் மட்டும் ஏன் சோர்ந்து போய் அழுத கண்களோடு அலைகிறீர்கள்.

பெண் என்றால் காதல் வரும். காதல் வந்தால் அதிலும் தோல்வி யும் வரத்தானே செய்யும். காதல் தோல்வியை ஏன் வாழ்க்கைத்தோல்வியாக கருதுகிறீர்கள். காதலைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?’ என்று கேட்டேன். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து ஓரளவு இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பின்பு, ‘நாளையும் நீங்கள் வாருங்கள். முக்கியமான சிலரை நீங்கள் சந்திக்கலாம். அந்த சந்திப்பு உங்களுக்கு மிகுந்த பலனுள்ளதாக இருக்கும்’ என்றேன்.

மறுநாள் அவர்கள் வந்தார்கள். அவர்களுக்காக நான்கு பெண்கள் காத்திருந்தார்கள். அந்த நால்வரும் கடந்த வருடம் காதலில் தோல்வி அடைந்து, அந்த தோல்வியை வெற்றியாக்கிக்கொண்டு வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் உயர்ந்தவர்கள். அந்த நால்வரும் இந்த இருவருடன் கலந்துரையாடினார்கள்.

‘காதல் தோல்வியை நம்மை போன்ற பெண்களின் மனது ஏற்றுக்கொள்வது சற்று கடினம்தான். நானும் சிறிதுகாலம் உங்களை போன்று கவலையோடுதான் இருந்தேன். அப்போது காதலர்கள் பிரிந்துபோகும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சினிமாக்களாக தேடிப்பிடித்து பார்த்தேன். என் மீதே எனக்கு சுயபச்சாதாபம் ஏற்பட்டு நான் அழுதுவிடுவேன் என்பதற்காக, பலநாட்கள் என்னையே நான் கண்ணாடியில்கூட பார்க்காமல் இருந்தேன். ஆனால் அந்த காதல் தோல்விதான் வாழ்க்கையில் எனக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கித் தந்தது.

திடீரென்று ஒருநாள் கண்ணாடியில் என்னை பார்த்தபோது, எனக்குள்ளே ஒரு தீப்பொறி உருவானதுபோல் இருந்தது, அப்போது என்னை பார்த்து நானே சில கேள்விகளை கேட்டேன். ‘காதலித்த அந்த ஒரே ஒரு நபருக்காக மட்டுமா நீ படைக்கப்பட்டாய்? அந்த காதலைத் தவிர உனக்கு வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லையா?’ என்ற கேள்விகளை என்னிடமே நான் கேட்டேன். அப்போதுதான் காதல் தோல்விக்கு பின்பு அதையே நினைத்து அழுது, பொன்னான காலத்தை இழந்துவிட்டதை நான் உணர்ந்தேன். அப்போதே ‘நான் தோற்கப்பிறந்தவள் அல்ல’ என்று உறுதிபட கூறிவிட்டு, எனக்கு பிடிக்காத சட்டையை கழற்றி தூரவீசியது போல் அவனது நினைவுகளை என்னிடம் இருந்து அகற்றினேன். அதற்கு தியானமும், மியூசிக் தெரபியும், கவுன்சலிங்கும் கைகொடுத்தது.

அதன் பிறகு என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் உருவானது. என் முழு திறமையையும் பணியில் வெளிப்படுத்தினேன். காதலித்த காலகட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் ஆயிரம் பேரில் ஒருத்தியாகத்தான் நான் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது அதே நிறுவனத்தில் ‘ப்ராஜெக்ட் ஹெட்’டாக உயர்ந் திருக்கிறேன்.

காதலித்தபோது ஊர்சுற்றி கண்டபடி சாப்பிட்டு என் உடல் குண்டாகியிருந்தது. பின்பு உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டேன். உடற்பயிற்சி செய்தேன். இப்போது மாதத்தில் ஒருநாள் மலையேற்றப் பயிற்சிக்கு செல்கிறேன். நிறைய சுற்றுப்பயணம் செய்கிறேன். காதல் தோல்விதான் எனக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைக் காட்டியது. இப்போது எனக்கு அதிக தைரியம் வந்திருக்கிறது. என் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறேன். முன்பு நீள கூந்தல் வளர்த்தேன். இப்போது குட்டையாக வெட்டிக்கொண்டு கூடுதல் அழகுடன் ஜொலிக்கிறேன்’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னாள். அடுத்து அவள் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருக்கிறாள்.

இன்னொரு பெண் ‘நான் காதல்வசப்பட்டிருந்தபோது இரவும் பகலும் அதை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அந்த காதலை வெற்றியடைய வைப்பது மட்டுமே லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காதலில் தோல்வியடைந்து, என்னையே நான் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்த பின்புதான் வாழ்க்கையில் எதிலெல்லாம் நான் தோல்வியடைந்தேன் என்பதும், என் வாழ்க்கை லட்சியங்கள் என்னென்ன என்பதும் புரிந்தது. அதன் பின்பு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் புதிய லட்சியங்களை நோக்கி ஓடத் தொடங்கினேன். இப்போது நானும் எனது கலைத் துறையில் பிரபலமானதொரு பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னாள்.

முன்பு காதலில் தோல்வியடைந்து, அதன் பின்பு வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொட்ட அந்த நான்கு பெண்களும், தற்போது காதலில் தோல்வியடைந்து கண்ணீருடன் அலைந்துகொண்டிருக்கும் இந்த பெண்களுக்கு, பல்வேறுவிதமாக நிஜங்களை புரிய வைத்தார்கள். தங்களுக்குள் நட்பையும் பலப்படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கொடுத்த கவுன்சலிங்கில் அவர்களுக்குள் நல்ல மனமாற்றங்கள் ஏற்பட்டது.

பெண்களே இனி ‘காதலில் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘அந்த காதல் கைகூடவில்லை’ என்று சொல்லிவிட்டு, அதை மறந்திடுங்கள். கைகூடாத காதல் வாழ்க்கையில் சகஜமானது. அது கவலைக் குரியதோ, கண்ணீருக்கு உரியதோ அல்ல. விரைவாக அதில் இருந்து மீண்டு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும். வாழ்க்கை காதலுக்கு மட்டுமானதல்ல! வாழ்க்கை எல்லையற்ற கடல்போன்றது!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker