உறவுகள்புதியவை

இவர்களுக்கு தயங்காமல் நன்றி சொல்லலாம்

நெருங்கிய நண்பர்கள், மனதுக்கு பிடித்தமானவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் தக்க சமயத்தில் உதவி செய்யும்போதோ அல்லது அவர்களிடம் இருந்து ஏதாவதொரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ளும்போதோ அவர்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் பலரும் நன்றி சொல்ல மறந்துவிடுவார்கள். ‘நமக்குள் எதற்கு நன்றியெல்லாம்’ என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படி நன்றி சொல்ல தவறுவது நல்ல விஷயமல்ல. நன்றி சொல்வது மனதுக்கும், இதயத்திற்கும் நல்லது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்று பார்ப்போம்.
1. யாரிடம் பழகினாலும் அவர்களிடம் இருந்து ஏதாவதொரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலும் நெருங்கி பழகுபவர்களாக இருந்தால் அக்கறையுடன் பல விஷயங்களை கற்றுக்கொடுப்பார்கள். அவர்களுக்கு நிச்சயமாக நன்றி கூற வேண்டும்.

2. சிலரிடம் ஒருசில கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். அதனை கைவிட முடியாமல் தவிப்பார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அதில் இருந்து மீள முடியாமல் இருக்கும் சூழலில் நெருங்கி பழகுபவர்கள் கூறும் ஆலோசனை பலன் கொடுப்பதாக அமையலாம். விரைவாக கெட்டப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

3. சிலர் எந்த செயலையும் ஈடுபாட்டோடு செய்வதற்கு முன்வர மாட்டார்கள். நாளை செய்யலாம், அதற்கு மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அப்படி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பதால் ஏற்படும் இழப்புகளை நெருங்கி பழகுபவர்கள் புரியவைக்கலாம். அவர்களே உடன் இருந்து அந்த செயலை முடிப்பதற்கு பக்கபலமாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறலாம்.

4. சிலருக்கு வாழ்க்கை மீது பிடிப்பே இருக்காது. ஒருவித சலிப்புடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பார்கள். எதிலும் ஆர்வம் இல்லாமல் சோம்பேறித்தனத்துடன் காட்சியளிப்பார்கள். குடும்ப நலனில் அக்கறை கொண்ட நபர்கள், வாழ்க்கையை புரியவைத்து அதன் மீது பற்றுதலை ஏற்படுத்தி இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது.

5. அலுவலக பணியில் நெருக்கடியான சூழலில் சக ஊழியர் உடன் இருந்து வேலையை முடிப்பதற்கு உதவி இருக்கலாம். நன்றி என்பது சிறிய வார்த்தைதான். ஆனால் வாழ்வின் அர்த்தத்தை புரிய வைத்தவர்களுக்கு, உங்களையே புதுப்பிக்க வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் சொல்லும் நன்றி என்ற இந்த சிறிய வார்த்தை மிகப்பெரிய சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆறுதலையும் நிச்சயம் தரும். எனவே, யாராவது எந்த வகையிலாவது உதவி இருந்தால், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டியிருந்தால், தயங்காமல் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker