ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

மன அழுத்தமும்… திசை திருப்பும் பயிற்சியும்…

மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்...

மன அழுத்தமும்… திசை திருப்பும் பயிற்சியும்…
இன்றைய காலகட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்கள் அதிகரித்து வருவதாக உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களிடம் மன அழுத்த பாதிப்பு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிலரே அது பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.

விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது தவறாமல் உடற்பயிற்சி செய்வது மனச்சோர்வை போக்கும் மிகச்சிறந்த வழிமுறையாகும். ஒருவர் மனச்சோர்வடையும் போது உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவது மனநிலையை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சி தவிர யோகாசனமும் செய்யலாம். ஆன்மிக வழிகாட்டுதலையும் பின் தொடரலாம்.

மனதை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுவது முக்கியம். நம்பகமான நண்பர்களிடம் சிக்கலான பிரச்சினைகள், மனதை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம். அப்படி விவாதிப்பது மனதை காயப்படுத்தும் எண்ணங் களில் இருந்து விடுபட உதவும். மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் வழி வகை செய்யும். நெருங்கிய நண்பர்கள் இல்லாதபட்சத்தில் மனநல ஆலோசகர்களை நாடலாம்.

பசிக்கும், மனநிலைக்கும் இடையே விசித்திரமான தொடர்பு இருக்கிறது. மனச்சோர்வுக்குள்ளாகும்போது சிலர் சாப்பிடமாட்டார்கள். சிலர் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிடுவார்கள். அதேவேளையில் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. பசி எடுக்காவிட்டாலும் தேவைக்கு சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மனச்சோர்வுக்குள்ளாகும்போது மனதை திசை திருப்பும் செயல்பாடுகளில் ஈடுபடலாம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடலாம். அது உள்உணர்வுகளை கட்டுப்படுத்த துணைபுரியும். மனதை வருத்திக்கொண்டிருக்கும் பிரச்சினையின் வீரியத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.

முக்கியமான செயல்களை செய்து முடிக்க முடியாமல் போகும்போது மனம் சோர்வுக்குள்ளாகும். அப்படிப்பட்டவர்கள் ‘என்னால் இதை செய்ய இயலாது’ என்ற எண்ணத்துடன் களம் இறங்குவதற்கு பதிலாக ‘அதில் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்’ என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வு ஏற்படாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker