ஃபேஷன்அழகு..அழகு..புதியவை

முகப்பரு தொல்லையா? இதோ இருக்கு இயற்கை வைத்தியம்

முகப்பரு தொல்லையா? இதோ இருக்கு இயற்கை வைத்தியம்

முகப்பரு தொல்லை
அழகாக மேக்கப் செய்திருந்தாலும் முகப்பருக்கள் காரணமாக இமேஜ் டேமேஜ் ஆகும் சங்கடம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா? இதோ இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.

தோலுக்கு அடியில் அமைந்துள்ள செபேஷியஸ் சுரப்பிகளில் இருந்து சீபம் என்னும் எண்ணெய் பொருள் சுரக்கிறது. மாசு மற்றும் தூசு இந்த எண்ணெய் பொருளில் படிந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து கொள்கிறது. இதனால் தோலுக்கடியில் சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் தோன்றுகின்றன. உடனடியாக அவற்றை கிள்ளி விட பலருடைய கைகள் துடிக்கும். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது. அவற்றை கிள்ளிவிட்டால் புண்ணாகி விடும். அவற்றின் மேல் புதினா இலைகளை அரைத்து தடவலாம்.

மேலும் வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.

அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி விழுது ஆகியவற்றை சற்று குழைத்து முகத்தில் தடவி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச்செய்யும்.

வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.

தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.

4 துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை பருக்களின் மீது தடவி, 15 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.

அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து கலக்கி இரவில் பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker