பெண்களின் உடல் பருமனை குறைக்கும் வீட்டு வைத்தியம்
உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் அது உடலை நோய்களின் கூடாரமாக்கிவிடும். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், மூட்டு நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை உருவாக காரணமாகிவிடும். பின்பு உடல் எடையை குறைப்பதும், அதனால் உருவான நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதும் கடினமான காரியமாகிவிடும். அதனால் ஒவ்வொருவரும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், வீட்டு வைத்தியத்தினால் அதற்கு தீர்வு காணலாம். எப்படி தெரியுமா?
இஞ்சியில் ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் போன்ற சக்தி தரும் பொருட்கள் இருக்கின்றன. அவை செரிமானத்திறனை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் திறனையும் பெற்றிருக்கிறது. இஞ்சியை தோல் சீவி அரைத்து பிழிந்து, மூன்று தேக்கரண்டி அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவில் தேனையும் எடுத்து, இரண்டையும் ஒரு கப் இளம்சூடான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, கீழாநெல்லி, நெல்லிக்காய் போன்றவைகளை சம அளவில் எடுத்து இடித்து, 2 தேக்கரண்டி அளவு எடுக்கவும். அதனை இளம் சூடு நீரில் கலந்து பருகினால் உடலில் கொழுப்பு குறைவதோடு எடையும் கட்டுக்குள் வரும்.
பெருஞ்சீரகத்தை பொடித்து அரை தேக்கரண்டி அளவில் நீரில் கலந்து காலையும், மாலையும் பருகிவந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு கப் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம அளவில் கலந்து பருகுவதும் நல்லது. இவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கொழுப்பையும் குறைக்கிறது. உடல் எடையும் குறைய வாய்ப்பிருக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தக்காளி, முட்டைகோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, பிராகோலி, ஆப்பிள், ஓட்ஸ், பாதாம், வால்நட், மோர் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வெள்ளை ரொட்டி, பட்டைதீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம். உடல் பருமன் கொண்டவர்கள் தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகளை பின்பற்றினால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.