ஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்?
இளைஞர்கள் நிறைய பேர் தாடி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை அழகாக அலங்கரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.
தாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாடி வளர்க்கலாம்.
நன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தனது வாழ்க்கை துணை தாடி வளர்ப்பவராக இருக்கும் பட்சத்தில் அவருடனான இல்லற பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கும் என்றும் ஒருபகுதி பெண்கள் கருதுகிறார்கள். தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.
‘டேட்டிங்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றில், தாடி வளர்ப்பவர்களை கவர்ச்சிகரமான நபர்களாக 60 சதவீத பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தாடி, மீசையுடன் கூடிய ஆண்களை தங்களின் சிறந்த பார்ட்னராக தேர்வு செய்தார்கள்.
ஷேவிங் செய்யும்போது சருமம் எரிச்சலுக்குள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். ஆனால் தாடி வளர்த்து கொண்டிருந்தால் முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது. முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டால் தாடி வளர்க்க தொடங்கிவிடலாம்.
ஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
தாடி வளர்ப்பது பெரிய விஷயமல்ல. அதனை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அதில்தான் தாடியின் அழகு வெளிப்படும்.