ஆரோக்கியம்

பெண்களின் உடலையும், மனதையும் மகிழ்விக்கும் உடற்பயிற்சிகள்

உற்சாகத்தோடும், புன்னகையோடும் வாழ தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் அதுபற்றிய உண்மைகளையும் புரிந்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சியின் மகத்துவத்தை உலகமே இப்போது உணரத் தொடங்கிவிட்டது. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். உற்சாகத்தோடும், புன்னகையோடும் வாழ தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உடற்பயிற்சி செய்யாத உடல் சுமையாகிவிடும். அதை தூக்கி சுமப்பதே கடினமாகிவிடும். அதனால் இந்த புத்தாண்டு லட்சியத்தில் முதலிடத்தை உடற்பயிற்சிக்கு கொடுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் அதுபற்றிய உண்மைகளையும் புரிந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கை: ஓட்டம்தான் சிறந்த உடற்பயிற்சி. தினமும் ஓடினால் உடல் கட்டுக்கோப் பாகிவிடும். உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றையும் தேர்வுசெய்து பின்பற்றலாம். எந்த உடற்பயிற்சி செய்தாலும் நீங்கள் சாப்பிட்டதை விட அதிக கலோரி களை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான். மற்றவர்கள் விரும்பக்கூடிய பயிற்சியைதான் நீங்களும் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை.

நம்பிக்கை: உடலை வருத்தி செய்வதுதான் நல்ல உடற்பயிற்சியாகும். உண்மை: ‘ஜிம்’ பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம். உடற்பயிற்சிகூட உங்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.

நம்பிக்கை: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம். மாலை நேரமும் செய்யலாம். ஆனால் சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது. உடலில் நோயோ, வலியோ இருக்கும்போது உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும்.

நம்பிக்கை: உடலின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி கொடுத்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.

உண்மை: நமது உடலுக்கு ஓய்வும் தேவை. சிறப்பான உழைப்பும் தேவை. அதுபோல் உடற்பயிற்சி யிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல் பாடும் தேவை. சராசரி மனிதர்களின் உடற்பயிற்சி என்பது உடலின் ஒருபகுதிக்கானதல்ல, உடல் முழுவதற்குமானது.

நம்பிக்கை: காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.

உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமும் குறையும். பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையாது. உடலை பட்டினிபோடுவது பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உணவுக் கட்டுப்பாட்டோடு முறையான உடற்பயிற்சி களையும் மேற்கொண்டால், உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

நம்பிக்கை: வயது முதிர்ந்தவர்களும், சிறுவர்-சிறுமியர்களும் உடற் பயிற்சி செய்யத் தேவையில்லை.

உண்மை: உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு ‘ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்’ அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். முதியவர்கள் தங்கள் உடல்நிலைக்கு தகுந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். அதுபோல் சிறுவர்- சிறுமியர்களுக்கும் உடற்பயிற்சி அவசியம்தான். ஆனால் அவர்கள் ஓடி விளையாடுவார்கள் என்பதால் உடற்பயிற்சி வலியுறுத்தப்படுவதி்ல்லை. அவர்களை வீட்டிற்குள்ளே அடைத்துவைக்காதீர்கள். அவர்களை விளையாட அனுமதியுங்கள். அல்லது உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள். அது அவர்களுக்கு உடல் வலுவை வழங்குவதோடு தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

நம்பிக்கை: நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறந்தால்தான் உடலை கட்டுக்கோப்பாகவைத்துக்கொள்ள முடியும்.

உண்மை: சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது.

நம்பிக்கை: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே பெண்கள், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

உண்மை: பெண்கள் அலங்கார பதுமைகள்போல் இருக்கக்கூடாது. அனைத்துக்கும் வேலையாட்களை வைத்துக்கொண்டால், அவர்களது உடல் அவர்களது கட்டுப்பாட்டை இழந்துவிடும். கனமான பொருட்களை முறையாக தூக்கினால் உடலுக்கு பலமும், ஆரோக்கியமும் கிடைக்கும். பெண்களின் உடலுக்கும் உழைப்பு அவசியம்.

நம்பிக்கை: எல்லாவிதமான உடற்பயிற்சி கருவி களை வைத்தும் எல்லோரும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

உண்மை: நீச்சல், சைக்கிளிங், நடை, ஜாகிங் போன்றவைகளை பெரும்பாலும் எல்லோரும் செய்யலாம். ஆனால் விளம்பரத்தை பார்த்து உடற்பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டில்வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சிலரது உடல்நிலைக்கு சிலவிதமான உடற்பயி்ற்சிகள் ஏற்புடையதாக இருக்காது. அதனால் கருவிகள் மூலம் உடற்பயிற்சி செய்ய விரும்பினால் அதற்குரிய பயிற்சியாளரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker