சரும துளைகளை குறைக்கும் இயற்கை வைத்தியம்
முகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும்.
முகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். சிலருக்கு துளைகள் சற்று பெரிதாக காணப்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் எளிதாக இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
அவர்களுக்கு முகப்பரு பிரச்சினையும் தீராத தொந்தரவைத்தரும். மன அழுத்தம், மரபியல் சார்ந்த குறைபாடு, மோசமான சரும பராமரிப்பு போன்றவையும் சரும துளைகள் பெரிதாக தென்படுவதற்கு காரணமாக அமையலாம். இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி சரும துளைகளை குறைக்கலாம். முட்டை: முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தில் உள்ள துளைகளை குறைக்க உதவும். இது தோல் இறுக்கமடைவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் எண்ணெய் சுரப்பு தன்மை அதிகரிப்பதை கட்டுப்படுத்தி சரும துளைகளை இறுக்கமடைய செய்ய உதவும். அகன்ற கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி வெள்ளைக்கருவை மட்டும் தரம்பிரித்து முகத்தில் தடவ வேண்டும். நன்கு உலர்ந்ததும் டிஸ்யூ பேப்பரை கொண்டு மெதுவாக துடைத்தெடுக்க வேண்டும். பின்பு முகத்தை நன்றாக கழுவி விடலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகளை போக்குவதற்கும் இதனை பயன்படுத்தலாம்.
முல்தானி மெட்டி: இது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. இது வலுவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையை உறிஞ்சி எடுத்துவிடும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இறந்த செல்களையும் அகற்ற உதவும். முகத்தில் உள்ள துளைகளை குறைக்கும் தன்மையும் கொண்டது. ரசாயனம் கலந்த அழகு பொருட்களை விட முல்தானி மெட்டியை உபயோகிப்பது சிறப்பானது.
ஐஸ் கட்டிகள்: இது பல சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரவல்லது. சருமத்தில் துளைகள் பெரிதாக இருந்தால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. காட்டன் துணியில் ஐஸ்கட்டிகளை பொதிந்து சருமத்தில் மென்மையாக தடவ வேண்டும். இதற்கு சரும துளைகளை சுருக்கும் தன்மை உண்டு.
கடலை மாவு: சருமத்தில் உள்ள துளைகளை சரி செய்யும் சிறந்த சமையல் பொருட்களில் இது முக்கியமானது. இயற்கையாகவே சருமத்திற்கு அழகு சேர்க்கக்கூடியது. இறந்த செல்களை நீக்கவும் உதவும். சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இது காரத்தன்மை கொண்டது என்பதால் அப்படியே உபயோகிக்கக்கூடாது. பால், தயிர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற ஏதாவது ஒன்றுடன் கடலை மாவை கலந்து சருமத்திற்கு உபயோகிக்கலாம். இதனுடன் பப்பாளி மற்றும் அரைத்த மஞ்சளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு பராமரிப்புக்கும் தயிரை உபயோகிக்கலாம். கெட்டி தயிரை முகத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் உலரவிட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும துளைகள் குறையும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் துளைகள் இறுகுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கவும் உதவுகிறது.
சர்க்கரை: இது, சரும துளைகளில் படிந்திருக்கும் எண்ணெய் தன்மையையும், அழுக்கையும் நீக்கக்கூடியது. சிறுதளவு சர்க்கரையுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்ததும் சருமத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
வெள்ளரி: இதனை துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவி வந்தால், திறந்தவெளி துளைகள் நீங்கும். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் முகத்தில் தடவலாம். இதுவும் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது. முதுமையான தோற்றத்தை தடுக்கவும் உதவும். வெள்ளரிக்காயுடன் தயிரையும் சேர்த்து சரும அழகை மேம்படுத்தலாம்.