மருத்துவம்

பெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பெண்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் எலும்புகள் பலவீனடைந்து ‘ஆஸ்ட்ரோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் எலும்பு அடர்த்தி பாதிப்பு அதிகமாகி எலும்புகள் பலவீனமாகும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பப்பெல்லோ பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.

மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள். அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker