உறவுகள்

கசக்கும் வாழ்க்கை இனிக்கும் ரகசியம்

வேலைக்கு செல்லும் தம்பதிகள் காதலை காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் கனிவாகப் பேச நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கென்று தினமும் நேரத்தை ஒதுக்கிக் கொண்டால் காதலை காப்பாற்றி, அன்பை பெருக்கலாம்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்களில் பலர் கணவரிடம் ‘நீங்கள் முன்பு போன்று என்னிடம் அன்பு காட்டுவதில்லை’ என்று குறைபடுகிறார்கள். ‘திருமணத்திற்கு முன்பு, தனிமையில் இருந்த போது ஆசை மொழி பேசி, கனிவு காட்டி காதலை வளர்த்துவிட்டு, திருமண பந்தத்தில் இணைந்து வாழ்க்கையை தொடங்கிய பின்பு, அன்பாய் இரண்டொரு வார்த்தைகள்கூட பேசிக் கொள்ளாமல், கடமைக்குப் பேசி காலத்தை ஓட்டுகிறீர்கள்’ என்றும் கவலையுடன் சொல்கிறார்கள்.

‘ மனைவியிடம் கனிவாய்ப் பேச ஒதுக்கும் சிலதுளி நேரமே காதலை வாழ்க்கை முழுவதும் ஆனந்த அலையாக அடித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது’ என்கிறார்கள், மனோதத்துவ நிபுணர்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘வேலைக்கு செல்லும் தம்பதிகள் காதலை காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் கனிவாகப் பேச நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கென்று தினமும் நேரத்தை ஒதுக்கிக் கொண்டால் காதலை காப்பாற்றி, அன்பை பெருக்கலாம்’ என்று குறிப்பிடுகிறது.

தினமும் ஆளுக்கொரு பக்கமாய் வேலைக்கு செல்லும் தம்பதிகள் தனிமையில் சந்திக்கும் நேரத்தின் அளவு குறைந்துவிட்டது. காதலிக்கும்போது தனிமையில் சந்திக்க ஏங்கிக்கிடந்த அவர்கள், கல்யாணத்திற்கு பிறகு அந்த தனிமை தருகின்ற சிலிர்ப்பை தவறவிட்டு விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கான தனிமையும், நெருக்கமும் குறைந்துபோய்விட்டது. அப்படி குறைந்துபோய்விட்ட நெருக்கத்தை இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தம்பதிகள் பெருக்கிக்கொள்ளவேண்டும்.

இப்போது கிடைத்திருக்கும் தனிமையை பயன்படுத்தி கனிவாக, இதமாக பேசவேண்டும். பேச்சும் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். வருகிற வார்த்தைகள் இருவருக்கும் இதயத்தில் இருந்து வரவேண்டும். அத்தகைய பேச்சுக்கள் எத்தகைய விரிசலையும் சரிசெய்திடும்.

இணையை ஒருவருக்கொருவர் ஊக்குவித் தால், காதல் மென்மேலும் வளரும். அன்றாட நிகழ்வுகளில் கூட துணையின் திறமையை பாராட்டத் தவறக்கூடாது. ‘இன்று நீ வைத்த குழம்பு அபார சுவை’ என்று கணவரும், ‘நீங்கள் கொடுத்த முத்தத்திற்கு ஈடாக எதுவுமில்லை’ என்று மனைவியும் பாராட்டிக் கொண்டால் பரஸ்பரம் அன்பு பெருகும்.

இன்றைய வாழ்க்கையில் கவலைகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம். கவலை மற்றும் சோர்வை போக்கும் சக்தி, பாராட்டுக்கு இருக்கிறது. ஜோடிகள் ஒருவருக்கொருவர் அர்த்தமுள்ள வகையில் பாராட்டிக் கொள்ளும்போது அவர்கள் மனதில் இருக்கும் கவலை மறந்துவிடும். புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதுபோல் நன்றி கூறுதலும் மிக முக்கியமானது. நன்றியை வீட்டுக்கு வெளியே உள்ளவர் களுக்குத்தான் கூறவேண்டும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல! நல்ல பழக்கங்கள் எதையும் வீட்டிற்குள் இருந்துதான் தொடங்கவேண்டும். தம்பதிகளும் தங்களுக்குள் நன்றி தெரிவிக்க முன்வரவேண்டும். நன்றி அன்பை அதிகரிக்கும்.

குடும்ப உறவை பேணுவதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. குரங்கு அவதாரம் எடுத்து குட்டிக்கரணம் போட்டு, வேடிக்கை காட்டி குடும்பத்தினரை சந்தோஷப்படுத்த வேண்டியதுமில்லை. ‘வாரம் ஒரு முறை இல்லற உறவு பேணி வந்தாலே போதும்’ என்கிறது ஆய்வு.

30 ஆயிரம் தம்பதிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘தாம்பத்ய உறவு என்பது மிகவும் இன்பம் அளிக்கக்கூடியது. உறவு இணக்கமாக உள்ளது என்பதை காட்டுவதே தம்பதியரின் சேர்க்கை தான்’ என்று குறிப்பிடுகிறது. அதற்காக தம்பதிகள் தினமும் உறவு கொள்ள வேண்டும் என்பதில்லை, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை உறவு பேணும் தம்பதிகள் மிக்க மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் என்று விளக்குகிறது, அந்த ஆய்வு. மற்ற நேரங் களில் அன்பான தழுவுதல், ஸ்பரிசங்கள், முத்தங்களே போதும் என்கிறது.

‘மனைவி தனது ஆசையை வெளிப் டுத்துவது தவறு என்ற மனப்பான்மை நம் சமூகத்தில் உள்ளது. ‘டிஜிட்டல்’ யுகமான இதில் உணர்வுகளை வெளிப்படுத்த, போராடிக் கொண்டிருக்கவோ, அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியமோ இல்லை. ஒற்றை வார்த்தை எஸ்.எம்.எஸ்., ஒரே ஒரு கவர்ச்சிகரமான சங்கேத வார்த்தை கூறினாலே தம்பதியர் உணர்வை பரிமாறிக் கொண்டு, அன்பை வளர்த்து ஆனந்தம் அடையலாம்.

இதை இன்றைய பெண்களும் நன்றாகவே புரிந்திருக்கிறார்கள்.

“தாம்பத்யம்தான் எங்களை கட்டிப்போட்டிருக்கும் காதல் கயிறு. வாழ்க்கையில் எவ்வளவு மனஅழுத்தங்கள், கஷ்டங்கள் தொடர்ந்தாலும் இணையும் நேரத்தில் அவை காணாமல் போகும். எனவே நாங்கள் உறவைப் பேணுவதன் மூலமாகவே எங்கள் வாழ்க்கையையும் பேணிக் கொள்கிறோம். தம்பதிக்கு தாம்பத்யம்தான் அடிப்படை” என்று மகிழ்ச்சியாக சொல்கிறார், 40 வயது சுவேதா!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker