இல்லத்தரசிகள் குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்க வீடே போதுமானது…
வெளிநாடுகள் போல் இந்தியாவிலும் பராமரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. வீட்டிலிருந்தே தொழிலாக இதை செய்ய திட்டமிடும் இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன.
தனிக்குடும்பங்கள் பெருகி வரும் சூழலில் குழந்தைகள் பராமரிப்பு என்பது பெரிய சவால். இதற்காகவே வெளிநாடுகள் போல் இந்தியாவிலும் பராமரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. வீட்டிலிருந்தே தொழிலாக இதை செய்ய திட்டமிடும் இல்லத்தரசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவை
இடத்தேர்வு பராமரிப்பு மையம் அமைந்துள்ள இடம் குழந்தைகள் விளையாட ஏற்ற வகையில் காற்றோட்டமாக இருப்பதும் அவசியம். மேலும் தரைத்தள கட்டிடமாகவும், அனைத்து வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் வசிப்பிடத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் மையம் இருந்தால் தான் அவர்களை அழைத்துச்சொல்வது வீட்டில் விடுவது ஆகியவற்றுக்கு வசதியாக இருக்கும்.
கட்டிட வாடகை, விளையாட்டு உபகரணங்கள் அடிப்படை வசதிகள், ஊழியர்களுக்கான சம்பளம், பராமரிப்பு செலவு என அத்தியாவசிய தேவையை சமாளிக்க முதலீடு அவசியம். இது போன்ற தொழில்களை சிறுதொழிலாக கருத்தில் கொண்டு வங்கிகள் கடன்கள் வழங்குகின்றன. இதுகுறித்த போதிய விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியம்.
தொழிலுக்கான உரிமம் பெறுவது அதை சார்ந்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம். பாதுகாப்பு, உணவு, இதர வசதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து அரசு அனுமதி பெற வேண்டும். மையம் அமைந்துள்ள இடத்தில் தீ விபத்து போன்றவை நடக்காத வகையில் பாதுகாப்பானதாக உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மையத்தை காப்பீடு செய்வதும் அவசியம்.
ஊழியர்களின் நியமனத்திலும் கவனம் வேண்டும். குழந்தைகளை அன்பாகவும், அரவணைப்புடனும் கவனித்து கொள்வதுடன் தேவை அறிந்து செயல்படும் வகையில் ஊழியர்கள் இருக்க வேண்டும். ஊழியர்களின் செயல்பாடுகள் நமக்கு நன்மதிப்பை பெற்று தருவதுடன் குழந்தைகள் மையத்திற்கு விருப்பத்துடன் வருவதற்கான ஆர்வத்தை தூண்டும்.
அடிப்படை கல்வி
ஒரு வயது குழந்தையாக இருந்தாலும், அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அடிப்படை கல்வியும் கற்றுத்தர வேண்டும். இதை ஊழியர்கள் மட்டுமின்றி மைய உரிமையாளரும் தெரிந்திருக்க வேண்டும்.
நேர மேலாண்மை
அரசின் விதிகளின் படி பகல் நேர பராமரிப்பு மையம் காலை 9.30 மணிக்கு மேல் தொடங்கி மாலை 4.30 மணி வரை செயல்பட வேண்டும். இதில் 1:3 என்ற அடிப்படையில் ஊழியர்கள் இருக்க வேண்டும். அதிக குழந்தைகள் இருந்தால், ஒரு பிரிவுக்கு 15 குழந்தைகளாக சேர்த்து கொள்ளலாம். 3 மணி நேரத்திற்கு ஒரு பிரிவு என்ற வகையில் பிரிந்து கொள்ளலாம்.
விதிமுறைகள்
மையத்தின் விதிமுறைகள் குறித்து பெற்றோர்களிடம் ஆரம்ப நிலையிலேயே தெளிவாக தெரியப்படுத்தி ஒப்புதல் பெற வேண்டும். மேலும் மையத்தை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி முன்னதாகவே தெளிவு பெற்றிருக்க வேண்டும்.
விளம்பரம்
மையத்தில் உள்ள வசதிகள் வழங்கப்படும் சேவைகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். நவீன உலகில் தொழில் நுட்ப வசதிகளை சரியான வகையில் பயன்படுத்தி கொண்டால் செலவில்லாமல் விளம்பரம் கிடைக்கும்.
மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றி வீட்டிலேயே இந்த தொழிலை தொடங்கி வெற்றி பெறலாம்.