உலக நடப்புகள்

காதலனுக்காக கபட நாடகம்

தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது.

பெண்களை நம்பவைத்து ஏமாற்றிய `மயக்கமருந்து பெண்’ வெளிப்படுத்தும் பதறவைக்கும் உண்மைகள்

மனித சமூகத்தில் மோசமான மனிதர்களும் உண்டு. அதனால்தான் நல்ல மனிதர்களை அடையாளங்கண்டு அவர்களிடம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கவேண்டும். தவறான மனிதர்களுடன் இணையும்போது அந்த பெண்களும் தவறான வழிக்கு சென்று தீராத பழி பாவத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். தவறான சேர்க்கையால், பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றி கொலைக்கும் காரணமாகி, தன் வாழ்க்கையையே கெடுத்துக்கொண்ட மயக்கமருந்து பெண்ணின் கதை இது. பெண்ணின் கொலைக்கு உடந்தையாக இருந்ததால் தண்டனை பெற்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் சந்தியா (பெயர்மாற்றம்), நெஞ்சை பதறவைக்கும் தனது உண்மைக்கதையை சொல்கிறார்:

‘‘சிறுவயதில் இருந்தே நான் ரத்தத்தை பார்த்து வளர்ந்தவள். அப்பா ஆடுகளை வெட்டி வியாபாரம் செய்பவர். ஆடுகளையும், சில நேரங்களில் மாடுகளையும் வீட்டின் பின்பகுதிக்கு கொண்டு சென்று, கொன்று, அறுப்பார். அவைகள் உயிரை விடும் நேரத்தில் எழும் அலறல் சத்தமும், பீறிட்டு வழியும் ரத்தமும் காலப்போக்கில் எனக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அன்றாடக் காட்சிகளாகிவிட்டது.

வெட்டிப்போட்ட ஆடுகளையும், மாடுகளையும் சுத்தப்படுத்தி கறியாக்க ஆண்கள் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் அந்த வேலையை பார்ப்பேன். எனக்கு பத்து வயதாக இருந்தபோது ஒரு நாள் எனது அம்மாவுக்கும்- அப்பாவுக்கும் சண்டை வந்தது. அப்பா, அம்மாவை குத்திக்கொன்றுவிட்டார். அதன் பின்பு அப்பா எங்கே போனார் என்றே குழந்தைகளான எங்களுக்கு தெரியாது.

அதன் பின்பு நாங்கள் அனாதை இல்லத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. என் சகோதரர்கள் ஓரிடத்திலும், நான் இன்னொரு இடத்திலும் வளர்ந்தேன். நான் பள்ளிப்படிப்பை முடித்ததும், தூரத்து சொந்தமான உறவினர் ஒருவர் வந்து என்னை அவரோடு அழைத்துச்சென்றார். கொஞ்ச காலம் கடந்ததும் என்னைவிட மிக அதிக வயது கொண்ட ஒருவரை எனக்கு திருமணம் செய்துவைத்தார். நான் அவருக்கு மூன்றாவது மனைவி. அவரோடு வாழ்ந்து நான் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தேன். அவருக்கு என் மேல் கொஞ்சமும் அன்பு கிடையாது. அதனால் நான் அவரையும், குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு என்னுடன் சினேகம் காட்டிய ஒருவனோடு சென்றுவிட்டேன்.

நாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு திருடன் என்பது எனக்கு தெரியும். ஆனாலும் அவன் என்னை நேசித்ததால், அவனை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அவன் எனக்கும் திருட்டுத் தொழிலுக்கு பயிற்சி கொடுத்தான். நிறைய தங்க நகைகள் அணிந்து செல்லும் பெண்களின் வீடுகளை கண்காணித்து என்னிடம் சொல்வான். அவர்கள் தனியாக இருப்பார்கள். அந்த பெண்களுக்கு உறவினர்களும் இருக்கமாட்டார்கள்.

நான் அவர்களிடம் அறிமுகமாகி நட்பு பாராட்ட முயற்சிப்பேன். முதலில் சில நாட்கள் அவர்களை பார்த்து சிரிப்பேன். தொடக்க நாட்களில் சிரிக்காவிட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் என் முயற்சிக்கு வெற்றிகிடைத்துவிடும். அவர்கள் என்னை பார்த்து சிரித்துவிட்டால் எனக்கு வெற்றிதான். எப்படியாவது அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுவேன்.

சில மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் நான் அவர்களை நம்பவைத்து எனது ஆள் சொல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்துச்சென்றுவிடுவேன். மீதமுள்ள வேலையை அவன் செய்துவிடுவான். கொலையும் நடக்கும். பெரும்பாலும் நகையை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பிவிடுவான். பின்பு அந்த ஊரில் இருந்து இடம்மாறி வேறு ஊருக்கு போய்விடுவோம்.

நான் கர்ப்பிணியானதும் அடிக்கடி இடம்மாறிச்செல்ல என்னால் முடியவில்லை. அந்த காலகட்டத்திலும் அவன் அந்த பகுதியில் உள்ள சில பெண்களின் விவரங்களை சேகரித்து என்னிடம் தந்தான். நிறைந்த வயிறுடன் நான் சென்றபோது என் ஏமாற்று வேலைகள் எளிதானது. கனமான வயிற்றுடன் சோர்ந்து போய் காட்சியளிக்கையில் நான் சொல்வதை மற்றவர்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்.

எனக்கு எதிராக மூன்று வழக்குகளே பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றில் தண்டிக்கப்பட்டுதான் நான் இப்போது சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். கொலையாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறார்கள். அவனும் சிறையில்தான் உள்ளான். ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.

எனக்கு இன்னும் வயது ஐம்பது ஆகவில்லை. பெண்களை ஏமாற்றுவதற்காக என்னை என் காதலன் வேஷம் போடச்சொன்னான். நெற்றியில் எப்போதும் சந்தனமும், குங்குமமும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பான். அதனால் தினமும் காலையில் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உருவானது. விலை உயர்ந்த ஆபரணங்கள், புடவைகள் வாங்கித்தந்து எப்போதும் மற்றவர்களை கவரும் விதத்தில் அழகோடு காட்சியளிக்க வேண்டும் என்றான். நானும் நேர்த்தியாக உடை அணிந்து எப்போதும் அழகாகவே வலம் வருவேன்.

நான் நயவஞ்சகத்தோடு பலரை ஏமாற்றியிருந்தாலும், ஒரே ஒரு பெண்ணை நம்பவைத்து கழுத்தறுத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஒருமுறை சாலையில் தடுமாறிவிழுந்துவிட்டேன். கைமூட்டில் அடிபட்டுவிட்டது. அப்போது பலரும் உதவிக்கு வந்தாலும் ஒரே ஒரு பெண் என்னை தாங்கிப்பிடித்தார். நான் அவருக்கு நிறைந்த கண்ணோடு நன்றி கூறினேன். இரண்டு நாட்கள் கழித்து நான் கோவிலுக்கு சென்றிருந்தபோது அந்த பெண்மணி என்னை தேடிவந்து, `எப்படி இருக்கிறாய்.. குழந்தைக்கு எதுவும் ஆகவில்லையே?’ என்று கேட்டு நலம் விசாரித்தார்.

`ஸ்கேன் செய்து பார்த்தேன். குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. எனக்குதான் முதுகுவலிக்கிறது. பலரும் உதவியது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் நீங்கள்தான் எனது நன்றிக்குரியவர்’ என்றேன். என்னை பற்றி நிறைய சோகக் கதைகளையும் கூறி அவரது மனதில் இடம்பிடித்தேன். அவரது நம்பிக்கையை பெற பல காரியங்களை செய்தேன். கோவிலில் அவரது பெயருக்கு ஒரு வழிபாடும் நடத்தினேன். `எனது மூத்த சகோதரி என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். அவரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்கள்’ என்றும் பொய் சொன்னேன். அவரும் ரொம்ப உருகிப்போய்விட்டார்.

அடுத்து என் காதலன் சொல்லிக்கொடுத்தபடி அந்த பெண்மணியை நயவஞ்சகமாக ஏமாற்ற திட்டம் தீட்டினேன். `அக்கா எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். நாளை நான் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டியதிருக்கிறது. என் கணவர் வெளியூரில் இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் யாராவது ஒருவர் என்னோடு வந்தால் நல்லது. உங்களால் வர முடியுமா? வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை..’ என்றேன். அந்த பெண்மணி உடனே சம்மதித்தார்.

மறுநாள் என் காதலன் டிரைவராகி, காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த பெண்மணி நிற்பதாக சொன்ன இடத்திற்கு சென்று அவரை ஏற்றிக்கொண்டோம். மருத்துவமனையை நோக்கி செல்வதாக சொன்னேன். நான் அவரை யோசிக்கவிடாமல் தொடர்ந்து அவரிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே இருந்தேன். ஆனாலும் அவர், மருத்துவமனை எங்கே இருக்கிறது? அந்த இடத்தை அடைய இன்னும் எவ்வளவு நேரமாகும்? என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

தூரத்தில், ஆட்கள் இல்லாத ஒர்க்‌ஷாப் ஒன்றின் உள்ளே கொண்டு போய் காதலன் காரை நிறுத்தினான். நான் எனது ஹேன்ட்பேக்கில் இருந்து மயக்க மருந்து ஸ்பிரேயை எடுத்தேன். எனது வாயையும், மூக்கையும் பாதுகாப்பாய் துணியால் கட்டிக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராக அடித்தேன். வழக்கமாக நான் கையாளும் உத்தி இதுதான். முதலில் அந்த பெண்மணி என்னை தாக்க முயற்சித்தாலும் சில நிமிடங்களிலே நினைவிழந்தார். பின்பு அந்த ஒர்க்‌ஷாப்பின் ஷட்டரை என் காதலன் இழுத்து மூடினான்.

நினைவற்று கிடந்த அந்த பெண்மணியை கீழே இறக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றினோம். அவரது ஹேன்ட்பேக்கில் இருந்து டெபிட் கார்டையும் எடுத்துக்கொண்டோம். இன்னொரு பவுச்சில் இருந்து அதன் பின்நம்பரையும் எடுத்தோம். அதற்குள் என் காதலன், அந்த பெண்மணியை கொன்றுவிட்டான். பின்பு அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி, அந்த ஷெட்டிலேயே போட்டோம். காரை வெளியே எடுத்தோம்.

`ரொம்ப நாட்களாக இந்த ஒர்க் ஷாப் மூடிக்கிடக்கிறது. நேற்று இரவுதான் நான் வந்து இதன் பூட்டை உடைத்து திறந்தேன்’ என்று கூறி, ஷட்டரை இழுத்து மூடினான். கொலை செய்யப்பட்ட அந்த பெண்மணியின் டெபிட் கார்டை பயன்படுத்தி எவ்வளவு பணத்தை எடுக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்தோம்.

அந்த பெண்மணி விதவை. தனியாக வசித்து வந்தார். திருமணமான அவரது மகன் அரசு வேலை பார்க்கிறார். அவர் மனைவியோடு தனியாக வசித்து வருகிறார். அவர் தினமும் இருமுறை அம்மாவுக்கு போன் செய்யும் வழக்கத்தை கொண்டவராக இருந்திருக்கிறார். வழக்கம்போல் காலையில் அவர் தனது அம்மாவுக்கு போன் செய்தபோது அவர், `நான் கோவிலில் வைத்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட நிறை மாத கர்ப்பிணியுடன் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மதியம் திரும்பிவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார்.

இரவு வரை தாயாருக்கு அவர் பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதாலும், வீடு திரும்பவில்லை என்பதாலும் அவர் போலீசில் புகார்செய்துவிட்டார். நான் பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

மகனின் புகாரின் பேரில் போலீசார் கோவிலில் போய் என்னை பற்றி விசாரித்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்கள் என்னை பற்றிய முழு விபரத்தையும் தெரிவித்துவிட்டார்கள். நான் பிரசவித்த இரண்டாவது நாளில் போலீசார் என்னை மருத்துவமனையிலேயே கைதுசெய்தார்கள். எனது குழந்தை இறந்து பிறந்தது. அதுவும் நல்லதுக்குதான். இல்லாவிட்டால் என்னோடு அதுவும் ஜெயில் வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கும்.

அந்த பெண்மணியின் உடலை நான்தான் காட்டிக்கொடுத்தேன். என் காதலனையும் காட்டிக்கொடுத்தேன். அவன் செய்த இதர கொலைகளை பற்றி எனக்கு தெரியாது. அந்த உடல்களை என்ன செய்தான் என்பதும் தெரியாது. தண்டனை காலம் முடிந்து நான் வெளியே செல்லவேண்டும். எனக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்கிறாள், சந்தியா.

ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் பெண்களுக்கு பேராபத்து இருக்கிறது. அதனால் தனியாக வசிக்கும் பெண்கள் அடுத்தவர்களை நம்பி ஒருபோதும் அவர்கள் பின்னால் சென்றுவிடக்கூடாது. அறிமுகமற்றவர்களுடன் நெருங்கவும் கூடாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker