தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பெண்கள் மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்?

பெண்கள் மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்?

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது இனிதான ஒரு அனுபவம். இன்றைய காலக்கட்டத்தில் இதனை ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அத்தகைய மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை?
* திருமணம் முடிந்த உடனே கணவனும் மனைவியும் முழு உடல் பரிசோதனை (Master health check up) செய்துவிட்டு, குடும்ப மருத்துவரை அல்லது ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து உங்களது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் அல்லது இல்லை என்பது பிரச்சனை அல்ல. எல்லோரும் ஒருமுறை இதனைச் செய்தல் மிகவும் நல்லது. இதனால் பலன் இருக்குமே தவிர இழப்பு எதுவும் இருக்கப் போவதில்லை.

* கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ பரம்பரை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதை ஒருவர் மற்றவரிடம் சொல்லாமல் மறைக்கவே முயற்சி செய்கின்றார்கள். அதன் விளைவாக பிறக்கும் குழந்தை அதே பாதிப்பிற்கு உள்ளாகின்றது. கணவன் மனைவி என்ற ஆன பின்னர், ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவில்லாமல் தங்களது உடல் பிரச்சனைகளைத் தெரிவித்து, தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது அந்த பிரச்சனையில் இருந்து உங்கள் குழந்தை விடுபட என்ன தீர்வு என்பதை அவர் தெரிவிப்பார். உங்கள் குழந்தையின் எதிர்கால நலன் கருதி இதனை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

* கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு இருந்தே ஃபோலிக் ஆசிட் மருந்துகளை பெண்கள் எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

* கணவன், மனைவி இருவரும் இரத்தப் பரிசோதனை செய்து தங்களது ப்ளட் க்ரூப் என்ன என்பதை அறிவது மிகவும் அவசியம். ஒருவர் பாஸிடிவ் இரத்த வகையிலும், மற்றொருவர் நெகட்டிவ் இரத்த வகையிலும் இருந்தால், கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் வழக்கத்தை விட அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டும்.

* பற்களில் பூச்சி பல், ஓட்டை போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்ப காலத்தில் பல் ஈறுகளின் வீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது எதிர்மறை விளைவுகளை உண்டு செய்யலாம். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு ஒரு நல்ல பல் மருத்துவரைச் சந்தித்து பற்கள் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை எல்லாம் சரி செய்துவிடுங்கள்.

* கர்ப்பம் தரித்தலுக்கு முன்பே நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்களது எடை ஆரோக்கியமான எடையாக இருப்பின் குழந்தை பிறப்பில் பிரச்சனைகள் வருவதில்லை. உங்கள் எடை உங்கள் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடையா என்பதை அறுசுவையில் கொடுக்கப்பட்டுள்ள உடல் பருமன் சுட்டு (Body Mass Index)  மூலம் உத்தேசமாக கணக்கிடலாம். அதீத பருமனும், மிகவும் மெல்லிய உடம்பும் குழந்தை பிறப்பின் போது தேவையில்லாத சிக்கல்களை தரவல்லது. எனவே, முறையான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்.

* உடல் ஆரோக்கியத்தைவிட முக்கியமான ஒன்று மன ஆரோக்கியம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மிகவும் ஓய்வான மனநிலையில், மனக் குழப்பங்கள், பயம் எதுவும் இல்லாமல் இருத்தல் மிகவும் அவசியமானது. மனதிற்கு ஸ்ட்ரெஸ் எதுவும் கொடுக்காமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருப்பது, தாய்மையையும், பிள்ளைப் பேற்றையும் இனிமையான அனுபவமாக்கும். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு மனதளவில் தயாராகுதல் மிகவும் முக்கியமானது. இதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

* அடுத்த விசயம், பட்ஜெட். பொருளாதார ரீதியில் கணவன், மனைவி தயாராய் இருப்பதும் அவசியமானது. இயற்கையான பிரசவம் நடைபெற வேண்டும் என்பதுதான் எல்லாரது விருப்பமாக இருந்தாலும், எதிர்பாராத காரணங்களால் பிரசவம் சிக்கலாக செல்வதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தாலோ, அல்லது பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் கொடுக்க வேண்டிய சூழல் வந்தாலோ, பணம் என்பது மிக முக்கிய தேவையாய் இருக்கும். எனவே, போதுமான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைத்து, பிரசவத்திற்கென்றே தனியே ஒதுக்கி வைத்தல் நல்லது.

* இறுதியாக, கருத்தரிக்க தயாராகும் பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியை சரியாய் கணக்கிட்டு, குழந்தைப்பேறு உண்டாக வாய்ப்பு உள்ள நாட்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் முக்கியமான ஒன்று. கருத்தரிக்க உகந்த நாட்களை அறுசுவையின் இந்த பக்கத்தின் மூலமாக கணக்கிடலாம். இது ஒரு உத்தேச கணக்கிடுதல். எல்லோருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாது.

குழந்தைபேற்றிற்கு இத்தனை விசயங்களை செய்ய வேண்டுமா? எல்லோரும் இப்படித்தான் செய்கின்றார்களா? என்ற கேள்விகள் எழலாம். இவை செய்வதற்கு சிரமமானவை அல்ல. இதனால் பாதிப்புகள் எதுவும் நிகழப் போவதில்லை. மாறாக நன்மைகளே பிறக்கும். சுகமான தாய்மைக்கு தயாராக இந்த வழிமுறைகள் பெரிதும் உதவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker