வயிறு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் யோகாசனங்கள்
உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களுடன், யோகாவை நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டால் வயிறு பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
பலருக்கும் வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமலேயே இருக்கும். வயிற்று வலிகளை எளிதில் சரி செய்ய இயலாது. வயிற்று வலி பிரச்சனையில் இருந்து விடுபட மருத்துவர்கள் அதிக திரவ மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். உடலில் வீக்கம், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகள் அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு, முறையான யோகாசனத்தை பின்பற்றும்போது அது பிரச்சனைகளை சரிசெய்கிறது.
சுகாசனம் (Sukhasana)
இந்த ஆசனம் செய்ய நமது உடலுக்கு ஓய்வு கொடுக்க கூடிய ஒரு இடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். முதலில் நீங்கள் சம்மணங்கால் போட்டு அமர வேண்டும். பிறகு உங்கள் வலது பதம் , இடது காலின் மீது ஒன்றன்பின் ஒன்றாக மடக்கவும். உங்களது வலது பாதம் இடது தொடையின் கீழாகவும், இடது பாதம் வலது காலின் கீழாகவும் இருக்கட்டும். உங்களது தலை, முதுகு, கழுத்து ஆகியவை ஒரே நேர் கோட்டில் இருக்குமாறு அமருங்கள். ஆனால் இதற்கென்று அதிக முயற்சிகள் நீங்கள் எடுக்க தேவையில்லை.
வயிறு சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய உங்களது வயிற்றில் கைகளை வைத்து கண்களை மூடிக்கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசிக்கும் போது நமது அடிவயிறு விரிவடைவதை நம்மால் உணர முடியும். நமது வயிறை நன்றாக உள்ளே இழுத்து, மூச்சினை மெதுவாக வெளியே தள்ள வேண்டும். இது உறுப்புகள் சுருங்கி விரிவதற்கு வழிவகுக்கிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. நமது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், உடலுக்கு வலிமை தரும் இந்த ஆசனம் உதவுகிறது.
பரிவிருத்த சுகாசனம் (Parivritta Sukhasana)
இந்த ஆசனத்தை நாம் மேற் கொள்வதால் நமது வயிற்றுப் பகுதி நன்றாக அழுத்தப்பட்டு ஊக்கம் அடைகிறது. மேலும் இதனால் நமது வயிற்றில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலிவடைகிறது. இந்த ஆசனத்தை செய்ய உங்களது உள்ளங்கைகள், இரு பக்கவாட்டிலும் உங்களது தொடைக்கு அருகில் இருக்கும்படி நேராக வைக்க வேண்டும். உங்களது கால்களை அகட்டி வைத்துக் கொள்ளுங்கள். உங்களது கால்களை அசைக்காமல் இடுப்பு பகுதியை மட்டும் இடதுபுறமாக திருப்ப வேண்டும். இப்போது உங்கள் இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தில் ஊன்றவும். ஏற்கனவே உயர்த்தி இருக்கும் இடது உள்ளங்கையின் மேல் உங்களது பார்வை இருக்க வேண்டும்.
இப்போது மெதுவாக மூச்சு விடவும். இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, உங்களது உடல் வலது புறம் நோக்கி இருக்க, உங்களது கைகள் தோள்பட்டைக்கு நேராக நீட்டியிருக்க வேண்டும். உங்களது கால்களை நகர்த்தாமல் உடலை முன்புறமாக திருப்பவும். கைகளைக் கீழே தொங்க விட வேண்டும். வலது காலை தூக்கி இடது காலின் அருகில் வைக்கவும். இதேபோல் மறுபுறமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நமது வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு வயிற்றுப் பகுதிக்கு ஊக்கம் கிடைக்கிறது. மேலும் ரத்த ஓட்டம் சீராகி, முதுகுத்தண்டு, இடுப்பு ஆகிய பகுதிகளில் வளைவு தன்மை அதிகரிக்கிறது. மேலும் சிறுநீரகம் வலுவடைகிறது. இவ்வாறு செய்யும் போது நமது வயிற்றை சுற்றியுள்ள உறுப்புகளுக்கு மசாஜ் செய்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. இது வயிற்றில் கூடுதல் இயக்கத்திற்கு வழிவகுக்கிறது.
பச்சிமோத்தாசனம் (Paschimottanasana)
இந்த ஆசனத்தை செய்ய நீங்கள் முதலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் கைகளை நீட்டி பெருவிரல்களை உங்கள் முகத்தைப் பார்த்து இருக்குமாறு பிடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தலையை முட்டியின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களது கைகள் தலைக்கு மேல் உயர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கை முட்டிகள் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். இப்போது நீங்கள் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இப்படி செய்யும்போது உங்கள் கட்டைவிரலை கைகளால் சுழற்றவும். இந்த ஆசனம் நமது வயிறு சுருங்கி விரிவதற்கும், செரிமான மண்டலத்தில் இயங்காமல் இருக்கும் ஆற்றல்களை இயக்குவதற்கும் உதவுகிறது.
பவன முக்தாசனம் (Pavana Muktasana)
இந்த ஆசனத்தை செய்ய தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் நேராக படுத்துக் கொள்ளவும். வலது காலை மடக்கி, மடக்கிய காலில் உங்களது இரு கைகளையும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களது வயிற்றை நோக்கி அழுத்த வேண்டும். இடதுகாலை மடிக்க வேண்டாம். இடது கால் தரையில் நேராக இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களது வலது கால் முட்டியை முகவாய் கட்டையை நோக்கி உயர்த்திக் கொள்ளுங்கள். இப்பொழுது மூச்சை அடக்கி 10 முதல் 15 வினாடிகள் கழித்து விடவும். பின் அந்த விரிப்பின் மீது படுத்துக் கொள்ளவும். இப்போது இதேபோல் இடதுகாலில் மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இதனால் நமக்கு குடல் சார்ந்த பிரச்சினைகள், வாயுக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் சீராகிறது. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிக தசைகள் குறைவதற்கு இது வழிவகுக்கிறது.