தலைக்குக் குளித்ததும் தூங்கி விடுகிறீர்களா? அதனால் வரும் பிரச்னையும் தெரிந்துகொள்ளுங்கள்..
காலை எழும்போது, தலையணையில் முடி கொட்டியிருக்கிறதா? தலை சீவும்போது, கொத்து கொத்தாக முடி உதிர்ந்து உங்களை பயமுறுத்துகிறதா? ஆரோக்கியமான மனிதர்களுக்கு தினமும் முடி உதிர்தல் இயல்பான ஒன்றுதான், ஆயினும் கொத்து கொத்தாக முடி உதிர்வது ஆபத்து. அதிகம் உதிர என்ன காரணம்? சில தனிப்பட்ட ஹார்மோன் குறைபாடுகளைத் தவிர, தலைமுடி உதிர்வதற்கு, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களே, பெரிதும் காரணமாகின்றன என்பதை நாமறிவோமா? நம்முடைய வழக்கமான தினசரி செயல்களே, தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமென்று நாம் அறிந்துகொண்டால், நிச்சயம் அதிர்ந்துதான் போவோம்.
அதில் முதன்மையானது தலைக்கு குளித்தவுடன் தூங்குவது. பெரும்பாலும் தலைக்கு குளித்தவுடன் நன்றாக தூக்கம் வரும். ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு அமைதியாக உணர இந்த தூக்கம் உதவும். ஆனால், நீங்கள் தலைக்கு குளித்த பின்னர் சரியாக முடியை உலரவிட்டு பின்னர் தான் தூங்குகிறீர்களா?ஏராளமானோர் இல்லை என்று தான் கூறுவார்கள். நாம் அதில் அதிக கவனம் செலுத்தாமல் போகலாம், ஆனால் உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும் போது தூங்குவது தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்யும் போது உங்கள் விரல்கள் ஊறியது போன்று மாறி இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? உங்கள் தலைமுடியிலும் இதேதான் நடக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது, அது உங்கள் முடியை மென்மையாக்கி பலவீனமாக்கும். இதனால் உங்கள் தலைமுடி உதிரும் வாய்ப்புகள் அதிகம். இதனால் முடி உதிர்வு பிரச்னை மட்டுமின்றி, ஈரமான முடி என்றால் ஈரமான உச்சந்தலை என்று பொருள். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இதனால் பொடுகு பிரச்னை ஏற்பட்டு தலையில் செதில்கள் உருவாகிறது.
குளித்தவுடன் தலைசீவுவதும் கூந்தல் உதிர்வுக்கு மற்றொரு காரணம். பலர் அதிகம் செய்யும் ஒரு அவசர காரியம், குளித்தவுடன் தலைசீவுவது. ஈரத்தலையில் மயிர்க்கால்கள் மிருதுவாக இருக்கும்போது தலையை அழுத்தி சீவுவதன் மூலம், மயிர்க்கால்களில் இருந்து முடிகள் இழுக்கப்பட்டு, முடி அதிகமாக உதிர்கிறது.
அதுபோல ஈரத்தலையுடன் தூங்குவது எவ்வளவு ஆபத்தானதோ, அப்தேபோல எண்ணெய் பசை இருக்கும் போது ஈரமான கூந்தலை சரியாக உலர விடாமல் தூங்குவதும் ஆபத்தானது. இதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலைமுடியை அலச வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச வேண்டும். இரவு தூங்குவதற்கு முன், தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கூந்தலை ஒழுங்காக அலசாமல் எண்ணெய் பசையுடன் இருந்தால் விரைவாக உலராது. எனவே அதற்கேற்ப தலை முடி அலசுவதில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதில் தவறில்லை. தலையில் நுனி முடி உடைவதும், முடி உதிர்வதும், உண்டாகும்போது, நீங்கள் பயன்படுத்தும் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் உங்களுக்கு சந்தேகம் தோன்றும். அதனால் நீங்கள் அதனை மாற்றி வேறு பொருட்களை பயன்படுத்துவீர்கள். ஆனாலும் பிரச்சனை தீராது. அந்த தருணத்தில் நீங்கள் தலை முடியை அலசும் விதங்களில் சில மாற்றங்கள் செய்யுங்கள். இதனை செய்வதால் உங்கள் தலை முடி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். எண்ணெய் பசை இல்லாமல் இருந்தாலே கூந்தல் விரைவாக உலர்ந்துவிடும், எனவே அதன் பின்னர் நீங்கள் தூங்கலாம்.