கண்கள் அடிக்கடி விடாமல் துடிப்பதன் காரணங்கள் என்ன? அதை எப்படிச் சரிசெய்யலாம்..
மன அழுத்தம், அதிக அளவு கஃபைன் உட்கொள்ளல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி ஆகியவை தான் கண் துடிப்புக்கு முக்கிய காரணம்.
உங்கள் கண்ணின் இமை, திடீரென துடித்த அனுபவம் நேர்ந்ததுண்டா? கண்ணின் மேல் இமை அல்லது கீழ் இமை படபடவென்று துடிக்கும். இந்தத் துடிப்பு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். அரிதாக மணிக்கணக்கில், நாள் கணக்கில் அதைவிட அதிகமாகவும் துடிக்கக்கூடும். அப்படி துடிக்க என்ன காரணம் தெரியுமா?
கண் இமை துடிப்பதற்கு என்ன காரணம்?
மன அழுத்தம், அதிக அளவு கஃபைன் உட்கொள்ளல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை, கண் வறட்சி ஆகியவை தான் கண் துடிப்புக்கு முக்கிய காரணம். மது அருந்துதல், ஸ்கிரீன் பிரைட்னஸ், இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், தலைசுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்கு காரணமாவதோடு, அதை அதிகப்படுத்தவும் செய்யும். பெரும்பாலும் வலி இல்லாமலே தான் இமை துடிக்கும். இது ஆபத்தானதும் அல்ல. பல நேரங்களில் சிகிச்சை ஏதும் தேவையில்லாமல் தானாகவே இது நின்று விடும்.
கண் இமை துடிப்பதை நிறுத்த செய்ய வேண்டியது :
கஃபைன்:டீ மற்றும் காஃபி போன்ற கஃபைன் பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம். ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று செக் செய்து பாருங்கள்.
ஆல்கஹால்:
ஆல்கஹாலை அதிகம் குடிப்பதாலும், கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல் தவிர்ப்பது நல்லது.
கண்ணில் வறட்சி:
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு:
சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
ஹைட்ரோதெரபி:
கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரை மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம். ஹைட்ரோதெரபி என்ற இந்த முறையில், தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும், வெதுவெதுப்பான நீர்படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மசாஜ்:
கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம். இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.
சிமிட்டுதல்:
முடிந்த அளவு இறுக்கமாக கண்களை மூடி, பிறகு முடிந்த அளவு விரிவாக திறக்கவும். கண்ணீர் வருமளவுக்கு தொடர்ந்து இப்படி செய்யவேண்டும். இது கண்கள் மற்றும் முகத்தின் தசைகள் விரிவடையச் செய்வதோடு, கண்களுக்கு நீர்ச்சத்து கிடைக்குமாறும், இரத்த ஓடம் அதிகரிக்குமாறும் செய்யும். இமைகளுக்கு இது ஓய்வையும் தரும். இதைச் செய்யும்போது கண்ணிமை துடிப்பு அதிகமானால் அல்லது வலி ஏற்பட்டால் நிறுத்திவிடவும்.
பண்டைய காலங்களில் இதுபோன்ற சிக்கல்கள் இருந்ததில்லை காலம் மாற, தொழில்நுட்பம் வளர இது போன்ற தொந்தரவுகள் பலருக்கும் ஏற்படுகிறது. இதனால் மோசமான பாதிப்பு இல்லை என்றாலும் இந்த பாதிப்பின் தொடக்கம் பல விதங்களில் நம்மை பாதிக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டாலும் ஏற்படும் இந்த கண்சிமிட்டல் நாட்கள் செல்ல செல்ல பல்வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.