சிலர் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் குண்டாக மாட்டார்கள்: ஏன் தெரியுமா..?
ஆரோக்கியமான எடையை பராமரிக்க, நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உடல்பருமன் அதிகம் உள்ளவர்கள் உடை எடையை குறைப்பதற்காக குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வர். ஜங்க் புட்ஸ் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை கைவிடுவர். உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு செல்வர்.
ஆனால், சிலர் எந்த மாதிரியான உணவையும் எவ்வளவு சாப்பிட்டாலும் கொஞ்சம் கூட எடை கூடியிருக்க மாட்டார்கள். எந்த ஒர்க்அவுட்டுகளும் மேற்கொள்ளாமல், நன்றாக சாப்பிட்டு அதே மெல்லிய உடல் வடிவமைப்பு பெற்றிருக்கும் நபர்களை பார்த்தால் காட்டாயம் உடல்பருமன் கொண்டவர்களுக்கு பொறாமை வரத்தான் செய்யும்.
அவர்களின் மெலிதான உருவத்திற்கு பின்னால் என்ன ரகசியம் இருக்கிறது என்ற சந்தேகம் மற்றவர்களை எப்போதும் வியக்க வைக்கிறது. இது அவர்களின் வளர்சிதை மாற்றமா? அல்லது வேறு ஏதாவதா?. என்ற கேள்விகள் எப்போதும் அவர்களை சுற்றி வரும். இது குறித்து ஒல்லி உடலமைப்பை கொண்டவர்களிடம் கேட்டால் சிலர் அதற்கு ஜீன் தான் காரணம் என்று கூட சொல்லுவார்கள். அந்த வகையில் ஒல்லியான உடலமைப்பை கொண்டவர்கள் எதை சாப்பிட்டாலும் ஏன் ஒருபோதும் எடை அதிகரிக்க மாட்டார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மெலிதான உருவத்திற்கு பின்னால் உள்ள ரகசியம்: மெலிதான உடலமைப்பிற்கு வேகமான வளர்சிதை மாற்றம் மட்டுமே காரணமாக இருக்காது. சிலர் எப்படி ஸ்லிம் உடலமைப்பை பராமரிக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் மிகவும் சிக்கலானது. ஏனெனில் அவர்களில் பல காரணிகள் செயல்படுகின்றன. மெலிதான உடல் எடையை பராமரிக்க உதவும் மரபியல், ஊட்டச்சத்து மற்றும் நடத்தை காரணிகள் கூட இதில் அடங்கும். அவர்கள் எடையை பராமரிக்கும் விதத்தில் மேற்கூறிய காரணிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு தலையிடுகின்றன என்பதைப் பொறுத்தே அமைகிறது.
மேலும், அவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் நிறைய சாப்பிடுவதாகத் தோன்றும். அதேசமயம், மற்றவர்கள் முன்பு இனிப்புகள், ஜங்க் புட் போன்ற உணவு பண்டங்களை சாப்பிடுவதால், அவர்கள் எப்போதும் அதிக உணவு சாப்பிடுவார்கள் என்பது அர்த்தமல்ல. ஒரு நாளில் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் அவர்கள் அதை ஈடுசெய்து கொள்கின்றனர். அதாவது அவர்களின் தினசரி கலோரி உட்கொள்ளல் மற்றவர்களை போலவே உள்ளது.
மெலிதானவர்களுக்கு எடையை பராமரிக்க உதவும் மற்றொரு காரணி அவர்களின் உடல் செயல்பாடுகளாக கூட இருக்கலாம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஜிம்மில் மணிநேரம் செலவழிப்பது என்று அர்த்தமல்ல. நாள் முழுவதும் அதிகமான உடல் செயல்பாடு அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபடுதல் போன்ற விஷயங்களும் அடங்கும்.
மற்றவர்களை காட்டிலும் சிலர் அதிபதியான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பதற்கு அவர்களின் மரபணு ரீதியான தாக்கம் கூட காரணமாக இருக்கலாம் என சில ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. ஏனெனில் உடல் செயல்பாடுகள் கணிசமான அளவு கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. இதுதவிர, சிலர் மற்றவர்களை விட ஒரே உடற்பயிற்சியைச் செய்வதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்கின்றனர். இது முற்றிலும் அவர்களின் மரபியலைப் பொறுத்து அமைவதாக கூறப்படுகிறது.
எடை அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றில் மரபியலின் பங்கு: ஒரு நபரின் எடையை அதிகரிப்பதிலும் குறைப்பதிலும் மரபியல் (Genetics) ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு PLOS ஜெனிடிக்சில் வெளியான ஆய்வின்படி, DNA-வின் 250க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகள் உடல் பருமனுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்விற்காக, குறைந்த உடல் நிறை குறியீட்டெண் (BMI) கொண்ட 1,622 ஆரோக்கியமானவர்களிடமிருந்தும், கடுமையான உடல் பருமன் கொண்ட 1,985 பேரிடமிருந்தும், சாதாரண எடையுள்ள 10,433 கட்டுப்பாட்டு மக்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில், மெல்லிய உலடமைப்பை கொண்டவர்களில் உடல் பருமனுடன் தொடர்புடைய மரபணுக்கள் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் மரபணுக்கள் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்புக்கு பங்களிக்கும் ஒரே விஷயமாக கருதப்படவில்லை. ஏனெனில் ஆய்வின் போது, மெலிதானவர்களில் உடல் பருமனுக்கான மரபணு நிர்ணயம் கொண்ட சிலரை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நமது உடல் எடையை நிர்ணயிப்பதில் நமது மரபணுக்களுக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால் அது மட்டும் தான் உந்து சக்தியாக இருக்கிறது என்பது அர்த்தமல்ல.
உங்கள் தூக்க முறை, உங்கள் வாழ்க்கை முறை பழக்கம், உங்கள் உடலில் இருக்கும் ஆல்கஹால் அளவு, உணவு தேர்வுகள், உடல் செயல்பாடு ஆகியவை உங்கள் எடையை தீர்மானிக்கிறது. எனவே, நீங்கள் உண்மையிலேயே சீரான வடிவம் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், குறைவாக சாப்பிடுவதிலோ அல்லது அதிகமாக உடற்செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம். மாறாக உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். இது திறம்பட உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.