உறவுகள்புதியவை

கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால்…

அதிக சக்தி நிறைந்தது அன்பான வார்த்தைகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அன்பின் சிறப்புகளை பற்றி மணிக்கணக்கில் பேசுபவர்கள்கூட தங்கள் சொந்த வாழ்க்கையில் பல தருணங்களில் கட்டளையிட்டு காரியம் சாதிப்பவர்களாகவே இருக்கிறார்கள். பொதுவாக பலரும் சிறுவயதில் இருந்தே கட்டளையிடுவதற்கு பழகிக்கொள்கிறார்கள். வேலைக்காரர்கள் முதல் வீட்டில் உள்ளவர்கள் வரை அனைவரிடமும் கட்டளையிட்டால்தான் காரியம் நடக்கும் என்ற எண்ணம் அவர்கள் அடிமனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.
இப்படியே அவர்களிடம் வளர்ந்து வரும் அந்த பழக்கம் திருமணமாவதற்கு முன்பு வரை பெரிய அளவில் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. அப்போது அவர்களுக்கு கட்டளையிடுதலின் வீரியமும் புரியாது. திருமணத்திற்கு பின்புதான் கட்டளையிடுதல் குடும்பத்தில் பெரும் களேபரத்தை உருவாக்கும். கணவன்-மனைவி இருவருமே கட்டளையிடும் பழக்கத்தை கைவிட வேண்டும். கட்டளைக்கு பதில் கனிவாகப் பேச திருமணமான புதிதில் இருந்தே அவர்கள் முன்வரவேண்டும்.
‘நான் இன்று சீக்கிரமாக அலுவலகத்திற்கு செல்லவேண்டும். இன்னும் அரை மணி நேரத்தில் எனக்கு காலை உணவை தயார் செய்’ என்று காலைநேரத்தில் கட்டளையிடும் கணவன்மார்களில் பெரும்பாலானவர்களுக்கு தோசை சுடுவதற்குகூட தெரியாது என்பது, அவர்களது மனைவிமார்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகும். ‘இத்தனை வயதாகியும் உனக்கு சட்னிகூட தயார் செய்யத் தெரியலை. அதை சுவையாக தயார் செய்ய கற்றுக்கொள்’ என்று சொல்வதுகூட கட்டளைதொனிதான். அப்படி கட்டளையிடும் பெரும்பாலான கணவன்மார்களுக்கு சட்னியில் என்னவெல்லாம் சேர்க்கப்படுகிறது என்பதுகூட தெரியாது.
மனைவியிடம் எந்த விஷயத்தையும் கட்டளைபோட்டு கற்பிக்க முன் வரக்கூடாது அநாகரிகமாக விமர்சனம் செய்யவும் கூடாது. அதுபோல் மிரட்டுவதையும் தவிர்க்கவேண்டும். ‘மிரட்டினால்தான் காரியம் நடக்கும். அன்பாக சொன்னால் தனது கருத்துக்கு யாரும் தலைவணங்க மாட்டார்கள்’ என்று பலரும் கருதுகிறார்கள். அந்த எண்ணம் தவறானது. அன்பாக பேசுவதில்தான் உண்மை இருக்கும். மிரட்டும்போது அன்பின் இடத்தை அதிகாரம் கைப்பற்றிக்கொள்ளும். குடும்பத்தில் கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால், அந்த வீட்டில் இருந்து பாசம் படியிறங்கிசென்றுவிடும். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அதிகாரம் செலுத்தும் தம்பதியரிடையே வளர்ந்து வரும் குழந்தைகளும் அதைதான் பின்பற்றுவார்கள். சிறுவயதில் இருந்தே அவர்களும் அதிகாரத்தை நிலைநாட்டுபவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கும் அன்பின் மாண்பு தெரியாமல் போய்விடும்.
‘திருமணம் முடிந்ததும் தங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டதாக’ புலம்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இப்படி புலம்புவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத அவர்களில் பெரும்பாலானவர்கள், நினைத்த நேரத்தில் வெளியே செல்வதையும்-கண்டபடி பணத்தை செலவுசெய்வதையும்-இஷ்டத்துக்கு சில காரியங்களை செய்து முடிப்பதையும்தான் அவர்கள் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நினைத்த உடனே எங்கேயாவது கிளம்பிச் சென்றுவிடுவது, கண்டநேரத்துக்கு வீடு திரும்புவது போன்ற பழக்கங்கள் கல்யாணத்துக்கு முன்பு இருந்திருக்கலாம். கல்யாணத்துக்குப் பிறகு இருவருக்கும் ஒத்துப்போகிற வாழ்க்கைக்கு இருவருமே இறங்கிவர வேண்டும். சுதந்திரம் என்ற வார்த்தையை தூக்கி தூரவைத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்தல் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
திருமணத்திற்கு பிறகு சுதந்திரம் பறிபோய்விட்டதாக ஒருவர் கூறுகிறார் என்றால், அவர் திருமணத்திற்கு முன்பு மனம்போன போக்கில் வாழ்ந்திருக்கிறார் என்று அர்த்தமாகிவிடும். திருமணத்திற்கு பிறகும் அதுபோல் வாழநினைப்பது சரியான வாழ்க்கை அல்ல. அவர்கள் முறையான வாழ்க்கை என்கிற கட்டுக்குள் திரும்பி வந்துவிட்டால், வாழ்க்கை இனிக்கும். அதுவே குடும்பத்திற்கும் நலம் பயக்கும். வாழ்க்கை இனிக்க, வசந்தம் வீச கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் மதிப்பதும், மரியாதை செலுத்துவதும் அவசியமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker