திருமணமான ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது விரைவில் திருமணம் செய்யப்போகிற இளைஞர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கு இந்த உதவிக்குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
லவ் மேரேஜ் அல்லது அரேஞ்ச் மேரேஜ் எதுவாக இருந்தாலும், தனக்கு வரப்போகிற கணவர் பெஸ்டா இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு பெண்ணின் இயல்பு. அதேபோல், ஆண்களுக்கும், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது. அப்படியான சூழலில் இருக்கும் திருமணமான ஆண்களாக இருந்தாலும் சரி அல்லது விரைவில் திருமணம் செய்யப்போகிற இளைஞர்களாக இருந்தாலும் சரி உங்களுக்கு இந்த உதவிக்குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மனைவியை புரிந்துகொள்ளுங்கள் : திருமணமான ஆண்கள் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று மனைவியை புரிந்துகொள்வது தான். அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். சாப்பாடு, பாடல், கேக், உடை, கலர் என ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தீர்கள் என்றால், அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களைப் பற்றிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். அதனால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை படிப்படியாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். விழா நாட்களில் அவர்களை இம்பரஸ் பண்ணுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். சின்ன சின்ன வார்த்தைகளில் மகிழ்ச்சியை கொடுங்கள்.
நிதி ஆலோசனை : வருமானம், செலவு உள்ளிட்ட நிதி பிரச்சனைகளை மனைவியிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது, அவர்கள் கொடுக்கும் சிறிய ஆலோசனை கூட உங்களுக்கு மிகப் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். அதைவிடுத்து பணம் தொடர்பான விஷயங்களில் நீ தலையிடாதே? என அடக்கி வைக்காதீர்கள். இருவருக்கும் சரிசமமான பொறுப்பு இருப்பதால், நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் வழிக்காட்டக்கூடிய சரியான நபர் உங்கள் மனைவி மட்டுமே. நிதி பிரச்சனை என்பது குடும்பத்தின் அமைதியைக்கூட கெடுத்துவிடும். அதனால், நிதி குறித்து இருவரும் ஆலோசிக்கும்போது எத்தகைய சூழலில் இருந்து நீங்கள் மீண்டுவர முடியும். அதற்கு மனைவியின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
மனைவிக்கு முக்கியத்துவம் : வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ அல்லது வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பிறகோ, இருக்கும் நேரங்களை மனைவியுடன் செலவிடுங்கள். தொலைப்பேசி, தொலைக்காட்சிகளில் உங்களை முழுவதும் அடகு வைத்துவிடாதீர்கள். அன்றைய நாளில் என்ன நடந்தது, எப்படி பொழுந்து கழிந்தது என இருவரும் மனம்விட்டு பேசுங்கள். சிறு சிறு விளையாட்டுகளை அவர்களுடன் விளையாடுங்கள். நிச்சயமாக உங்களின் செயல் அவர்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆளுக்கொரு திசையில் செல்போனை பயன்படுத்தினீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கிடைக்கும் நேரத்தை ஒன்றாக செலவழியுங்கள்.
மனைவியுடன் சமாதானம் : இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்ளும்போது கணவன் – மனைவிக்குள் சண்டை இருக்காது. சண்டை ஏற்பட்டால் கூட வெளிப்படையாக பேசிக்கொள்ளும் போது சில மணி நேரங்களில் அது சமாதானமாக மாறிவிடும். அதேவேளையில், மனைவி உங்களிடம் சண்டையிடும் போது, அவர்கள் பேசும் வார்த்தைகளை காதுகொடுத்து கேளுங்கள். பிரச்சனை வேண்டாம் என்று நினைத்து நீங்கள் ஒதுங்கிப்போக நினைத்தாலும், அப்படி செய்யாமல் அங்கேயே இருங்கள். ஏனென்றால், பிரச்சனையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று உங்கள் மனைவி எண்ணுவார்கள். அதற்கு இடம் கொடுங்கள். மாறாக, அவர்களிடம் சண்டையிட வேண்டாம். கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை என்பது ஒருநாளோ அல்லது வாராமோ அல்லது வருடமோ கடந்து பார்க்கும்போது உங்களைப் பார்த்து நீங்களே வெட்கப்பட்டுக்கொள்வீர்கள். அந்தளவுக்கு சாதாரணமாக தோன்றும். மனைவியிடம் சமாதானமாக செல்வதில் தவறில்லை ஆண்களே!
காதலிக்க மறக்காதீர்கள் : அன்பு ஒன்று தான் கணவன் – மனைவிக்கு இடையே இருக்கும் ஒரு இணைப்பு. அதனை எப்போதும் வெளிக்காட்டத் தயங்காதீர்கள். உங்கள் மனைவியை எப்போதும் ரசிக்க வைத்துக்கொண்டே இருங்கள். அதற்கு கணவனாகிய நீங்கள் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும். கொஞ்சம் யோசித்து செயல்பட்டீர்கள் என்றால் நீங்கள் பார்க்காத அந்த வெட்கத்தை, புன்சிரிப்பை உங்களுக்கு அன்பாக கொடுப்பார்கள். ஒரே மாதிரியாக ஐ லவ் யூ ( I LOVE YOU)என்று சொல்லாமல், ஒவ்வொரு முறையும் கொஞ்சம் வித்தியாசமாக டிரை பண்ணுங்க. உதராணமாக அவர்கள் காபி அருந்தும் கப்பில் ஐ லவ் யூ, சாப்பிடும் தட்டில் ஐ லவ் யூ என வித்தியாசமாக இடங்களில் எல்லாம் எழுதி வைத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள். நிச்சயம், நீங்கள் அவர்களின் பெஸ்ட் கணவராக இருப்பீர்கள்.