சுவையான… ஹனி சில்லி பொட்டேடோ
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு – 500 கிராம்
* சிவப்பு மிளகாய் – 1 (நன்கு பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
* சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* எள்ளு விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
பிரட்டுவதற்கு…
* சில்லி ஃப்ளேக்ஸ் – 2 டீஸ்பூன்
* தக்காளி சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
* வினிகர் – 1 டீஸ்பூன்
* தேன் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை எடுத்து தோலுரித்து, பிரெஞ்சு ப்ரைஸ் போன்று நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய பௌலை எடுத்து, அதில் நன்கு பொடியாக நறுக்கிய பூண்டு, சிவப்பு மிளகாய், உப்பு மற்றும் சோள மாவை போட்டு, அதில் நீரை சிறிது ஊற்றி மிகவும் நீராக இல்லாமல் ஓரளவு கெட்டியாக கலந்து 3-5 நிமிடம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் உருளைக்கிழங்கைப் போட்டு பிரட்டி வைத்துவிட வேண்டும்.
* அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். ஒருவேளை மொறுமொறுப்பு போதவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய 2 பூண்டு பல், எள்ளு விதைகள், வினிகர் மற்றும் தக்காளி சில்லி சாஸ் மற்றும் பொரித்து எடுத்துள்ள உருளைக்கிழங்கையும் போட்டு ஒரு நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி, பின் அதில் தேனை ஊற்றி நன்கு கிளறி, மேலே சிறிது எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான ஹனி சில்லி பொட்டேடோ தயார்!