ஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட சாப்பிட வேண்டிய உணவுகள்!
அல்சைமர் என்பது ஒரு நாள்பட்ட மூளையை பாதிக்கும் நோயாகும். இது மூளையில் சீரழிவை ஏற்படுத்துகிறது. இது ஒரு வகையான டிமென்ஷியா மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கக்கூடியது. அல்சைமர் நோய்க்கான முக்கிய காரணிகளுள் மரபணுக்கள், வயது மற்றும் குடும்ப வரலாறு போன்றவை அடங்கும். இந்த அல்சைமர் நோய் வரக்கூடாது என்றால், அறிவாற்றல் பயிற்சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உண்பது, சமூக ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடுவது போன்றவற்றை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளாகும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சீரான ஊட்டச்சத்துள்ள உணவுகளை ஒருவர் உட்கொண்டு வந்தால், அல்சைமர் நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம். அல்சைமர் நோயானது எடுத்த எடுப்பிலேயே வந்துவிடாது. இதற்கான அறிகுறிகள் படிப்படியாகத் தான் வெளிவரத் தொடங்கும். அதன் பின் அது மெதுவாக மூளையை சிதைவடையச் செய்யும். இப்போது ஒருவருக்கு அல்சைமர் நோய் இருந்தால் வெளிப்படும் சில பொதுவான அறிகுறிகளைக் காண்போம்.
அல்சைமர் நோயின் அறிகுறிகள்:
* ஞாபக மறதி * தனிமனித சுகாதாரத்தில் குறைவு * பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களில் குறைவு * வழக்கமான பணிகளைக் கூட செய்ய இயலாமை * மனநிலை மற்றும் ஆளுமையில் மாற்றங்கள் * எழுதுவது மற்றும் பேசுவதில் சிக்கல்கள்
அல்சைமர் நோய்க்கான சிறந்த உணவுகள்
அல்சைமர் நோயை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், இந்நோயின் ஆரம்ப கட்டங்களில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்வதன் மூலம் அல்சைமர் நோயின் முன்னேற்றத்தைக் குறைக்கலாம். அறிவாற்றல் வீழ்ச்சியின் செயல்முறையை மெதுவாக்குவதற்கும், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்குமான சிறந்த டயட் தான் MIND டயட். இது மத்திய மத்திய தரைக்கடல் மற்றும் DASH டயட்டுகளின் கலப்பினமாகும். கீழே அல்சைமர் நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க உதவும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மீன்
மீன்கள் மற்றும் பிற கடல் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மூளையின் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மிகவும் பயனுள்ள சத்தாகும். இந்த சத்தைப் பெற விரும்பினால், சால்மன், டுனா, ஹெர்ரிங்ஸ் மற்றும் மத்தி போன்ற மீன்களை வாரத்திற்கு ஒரு முறை சேர்க்கலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்
மக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்களாக ஏ, சி மற்றும் ஈ போன்றவை அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இத்தகைய சத்துக்கள் பசலைக்கீரை, கேல், கொலார்டு, ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் அதிகம் நிறைந்துள்ளன. இந்த வகை காய்கறிகளை வாரத்திற்கு 6 முறை உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.
நட்ஸ்
பல வகையான நட்ஸ்களான வால்நட்ஸ், வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் வளமான அளவில் உள்ளன. வாரத்திற்கு 5 முறை நட்ஸ்களை உணவில் சேர்த்து வந்தால், மூளை ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
பீன்ஸ்
சந்தைகளில் பல வகையான பீன்ஸ்கள் கிடைக்கின்றன. வாரத்திற்கு 2-3 முறை உணவில் பீன்ஸை சேர்த்து வருவது நல்லது. ஏனெனில் பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு. ஆகவே இதை உணவில் சேர்ப்பதன் மூலம் புத்தி கூர்மையாகும்.
பெர்ரி பழங்கள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் கொண்ட பெர்ரி பழங்கள், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன. எனவே உங்கள் உணவில் வாரத்திற்கு இரண்டு முறை ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பல்வேறு வகையான பெர்ரி பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.