புதியவைவீடு-தோட்டம்

தாளிப்பு பொருள்களை சுத்திகரித்து பக்குவமாக பதப்படுத்தி வைக்கும் முறை

சுத்தம் சுகாதாரம் என்று காய்கறிகளையும், பழங்களையும் ஒடும் நீரில் அலசி சுத்தமாக நறுக்கி சேர்க்கும் போது சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

நோயில்லா வாழ்க்கைக்கு சுகாதாரமும் மிக அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். சமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுத்தம் போலவே சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் சுத்தமாக பக்குவமாக பயன்படுத்த வேண்டும். வெளியிலிருந்து வாங்கி வரும் பொருள்களை அப்படியே சமையலில் சேர்ப்பது தான் வழக்கம்.

அரிசி, பருப்பு, கொட்டைகள் தானியங்கள் போன்றவற்றை நீரில் அலசி பயன்படுத்துவதுண்டு. ஆனால் சமையலில் சுவை கூட்ட சேர்க்கப்படும் அஞ்சறை பெட்டி பொருள்களை அப்படியே பயன்படுத்துவதுண்டு அதிலும் எல்லாமே பெரிய சூப்பர் மார்கெட் கடைகளில் வாங்குவதால் அவை பளபளப்பாக இருக்கவே அதை அப்படியே பயன்படுத்திவிடுகிறோம்.

கடுகு

எல்லா தாளிப்பு பொருள்களிலும் கடுகு சேர்ப்பது உண்டு. சட்னி முதல் குழம்பு வரை, கலந்த சாதங்கள், கடுகு காரக்குழம்பு என்று அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் கடுகை சேர்த்துவிடுவோம். பொதுவாக 100 கிராம் அல்லது 250 கிராம் வரை வாங்கி வைப்பது வழக்கம். கடுகை அப்படியே தாளிப்பில் சேர்க்காமல் அதை கழுவி சேர்க்க வேண்டும். ஆனால் ஈரமான கடுகை எண்ணெயில் சேர்க்க முடியாது. அதனால் இதை முன்கூட்டியே சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது.

கடுகு ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கும். பூச்சிகள் பிடிக்காமல் இருக்கும். அதனால் மொத்தமாக அரைக்கிலோ வாங்கி கடுகை வடிகட்டிய பாத்திரம் கொண்டு இரண்டு முறை நீர்விட்டு வடிகட்டவும். பிறகு அதை சல்லடை அல்லது வெள்ளை துணியில் போட்டு வெயில் போக நன்றாக காயவைக்கவும். அவ்வபோது கட்டி கட்டியாக இருப்பதை பிரித்து வைத்து காயவிடவும். கடுகில் பூச்சி வராது அப்படி வருவதாக இருந்தால் அதில் கல் உப்பு போட்டு வைக்கலாம்.

கடுகில் என்ன இருக்கு என்பவர்கள் சிறிதளவு கடுகை வெள்ளைத்துணியில் போட்டு தேய்த்து பார்த்தால் அது எவ்வளவு அழுக்கை கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

​சீரகம்

சீரகம் மிக முக்கியமாக சுத்தம் செய்ய வேண்டும். உடலுக்கு உணவு மூலமாக கிடைக்கும் சத்தில் முக்கியமானது சீரகம் சீரக நீர், சீரக சாதம், சீரக குழம்பு, சீரக தாளிப்பு என்று சீரகத்தை பயன்படுத்துகிறோம். சீரகத்தை யாரும் சுத்தம் செய்து பயன்படுத்துவதில்லை. கடைகளிலிருந்து வாங்கி வந்து அப்படியே பயன்படுத்துகிறோம்.

நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் சீரகத்தின் மேல் தோல் போன்று நீட்டியிருக்கும். சீரகத்தை வாங்கி சிறு உரலில் இட்டு இலேசாக இடிக்க வேண்டும். அவை இரண்டாக உடையக்கூடாது. பொடியாகவும் ஆக கூடாது. அதை முறத்தில் போட்டு புடைத்து எடுக்கவும். இப்போது அதன் உமிகள் நீங்கி சீரகம் முழுமையாக இருக்கும்.

இதை நீரில் ஒருமுறை அலசி எடுத்து வெயிலில் ஒரு நாள் காயவைத்து எடுத்தால் போதும். நீரில் அலசும் போது ஊறவிடகூடாது. அதிக முறை அலசகூடாது. இப்போது நீங்கள் சீரகத்தை உணவுக்கு பயன்படுத்தினால் இரண்டில் ஒரு பங்கு சேர்த்தால் போதும்.

​மிளகு

சீரகத்தை போன்று மிளகுக்கும் தனி இடம் உண்டு. மிளகு கலப்படமும் அதிகம் என்பதால் நீங்கள் பயன்படுத்தும் மிளகு கலப்படமில்லாமல் இருப்பதும் முக்கியம். மிளகில் பருத்தி விதை அல்லது பப்பாளி விதையை சேர்த்திருப்பார்கள். மிளகு பார்க்க பளபள என்று இருந்தாலும் அதில் அழுக்கு இருக்கவே செய்யும். நீர் மோரில் மிளகை சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வெள்ளை துணியில் அல்லது சல்லடையில் காயவைத்து எடுக்கவும்.

மிளகில் இருக்கும் கலப்படம் மேலே நிறமிழந்து மேலாக மிதக்கும். பிறகு மிளகை காயவைத்து எடுத்து பயன்படுத்தலாம். இப்படி காயவைத்து எடுத்தால் மிளகில் இருக்கும் மருத்துவ குணங்கள் போய்விடுமோ என்று கேட்கலாம். ஆனால் எந்த சத்தும் நீங்காது என்பதால் இதே போல் பயன்படுத்தி மிளகை சுத்தம் செய்யலாம்.

மஞ்சள்

மஞ்சள் தூள் கடையில் வாங்கி பயன்படுத்துபவர்கள் அதை வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் ஆல்கலாய்டு உடலில் நோய் எதிர்ப்புசக்திக்கு சிறந்த மருந்தாக இருக்கும். வைட்டமின் சி நிறைந்தவையும் கூட. உலகளவில் வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்தாகவே மஞ்சள் சொல்லப்படுகிறது. மஞ்சளை எல்லாவிதமான கிரேவி வகைகளிலும் சேர்க்கிறோம். மஞ்சளை வீட்டிலேயே அவ்வபோது தயாரித்து பயன்படுத்தலாம்.

பசு மஞ்சளை மொத்தமாக வாங்கி சுத்தமாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவிடவும். நன்றாக ஈரமில்லாமல் உலர்ந்ததும் இதை ஒரு பாத்திரத்தில் சேகரித்துவைக்கவும். எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மிக்ஸியில் போட்டு பொடித்து எடுக்கவும். இதை சலித்து பயன்படுத்தலாம். பசு மஞ்சள் கிடைக்கவில்லையென்றால் விரலி மஞ்சளையும் வாங்கி அரைக்கலாம்.

​இதர பொருள்கள்

அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருளில் வெந்தயம், க,பருப்பு, உ.பருப்பு, சோம்பு போன்றவையும் அடக்கம். இவற்றின் மேலும் தூசுக்கள் படிந்து இருக்க வாய்ப்புள்ளது. அதோடு பருப்பு வகைகளை நாம் நீரில் கழுவி சாம்பாராக வைப்போம். ஆனால் தாளிக்கும் போது அப்படியே தாளித்து விடுகிறோம். ஆனால் தாளிப்பு பொருள்களுக்கு தேவையான பருப்பையும், வெந்தயம், சோம்பு, போன்றவற்றையும் நீரில் அலசி வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். பருப்புகளை அதிக நேரம் நீரில் வைத்தால் அவை மரத்த நிலையை அடைந்துவிடும். இலேசாக நீர் விட்டு உடனே கழுவி காயவைத்து பயன்படுத்த வேண்டும்.

இப்படி சுத்தம் செய்து பயன்படுத்தும் போது பூச்சிகள் வராமல் இருக்கும் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். அஞ்சறை பெட்டியில் இருக்கும் பொருள்கள் எல்லாமே அருமருந்து என்று சொல்லும் நிலையில் அதையும் சுத்திகரித்து பயன்படுத்துவதுதான் சிறந்த ஆரோக்கியமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker