தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மாறும் மனநிலை.. பிரச்சனையை கையாளும் வழிமுறைகள்

உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, உங்கள் உணர்ச்சிகளும் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகலாம்.

கர்ப்ப காலத்தில் நீங்கள் அடிக்கடி மனநிலை மாற்றங்களை சந்திக்கிறீர்கள் என்றால், இது முற்றிலும் இயல்பான உணர்வு தான், மேலும் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு உங்களை வருத்தாமல், அவற்றை எதிர்கொண்டு மனநிலையைச் சமாளிப்பது நல்லது. உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, உங்கள் உணர்ச்சிகளும் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகலாம். ஏற்கெனவே மன அழுத்தம் உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் அது தொடர வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்ப கால மன அழுத்தம் என்பது தாய்/சேயினுடைய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதால் அதை நாம் அலட்சியப்படுத்தப்படக் கூடாது. பெண்களின் கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் என்பது மிகவும் பொதுவான பிரச்சினை ஆகும். 9 மாதங்களில், கர்ப்பிணி பெண்கள் பலவிதமான உணர்ச்சிகளையும், மனநிலையையும் உணர முடியும். அந்த சமயங்களில் மிகுந்த மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், பாதுகாப்பற்றவர்களாகவும், சில சமயங்களில் மனசோர்வாகவும் உணர்கின்றனர். இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகளை பின்பற்றினால் மனநிலை மாற்றங்களிலிருந்து நீங்கள் விரைவில் விடுபடலாம்.

பொழுதுபோக்கு :  எந்த இடத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் கிடைக்கிறதோ அங்கு அதிக நேரத்தை செலவிடுங்கள். நல்ல திரைப்படங்கள், பாடல்கள், மற்றும் நண்பர்கள் என எங்கு உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ அங்கு நேரத்தை செலவிடுங்கள். கோவில், சுற்றுலா, புத்தகம் படித்தல் போன்ற செயல்களை செய்து உங்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களின் மன அழுத்தம் குறைய வீட்டில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். வழிப்பாட்டு தலங்கள், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு செல்லலாம்.

மனம் விட்டு பேசுங்கள் : நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பற்றி உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் பேசுங்கள். அவ்வாறு பேசும் போது உங்களுக்குள் இருக்கும் கோப உணர்ச்சி குறையும், ஏன் நீங்கள் எதிர்பாராத விதமாக அழவும் செய்யலாம். மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தாரிடம் கர்ப்பிணிகள் மனம் விட்டு பேச வேண்டும். தங்களுக்கு உள்ள பயத்தை பற்றிப் பேசி தெளிவு பெற வேண்டும். இதற்கு குடும்பத்தாரும் அனுசரனையாக இருக்க வேண்டும். உங்களது கோபத்திற்கு காரணம் என்ன என்பதை சொல்லுங்கள். கர்ப்ப காலத்தில் உங்கள் மனதில் ஏற்படும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் குறித்து பகிர்ந்து கொள்வது நல்லது. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது குறித்து உங்கள் கணவர், குடும்பத்தினர், நண்பர்களிடம் வெளிப்படையாக கூறுவது மனஅமைதியை தரும்.

உடற்பயிற்சி : உங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும், மனதை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும் உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் சோர்வாக இருப்பது போன்று உணர்ந்தால், நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியேறும், இதனால் மனதில் நேர்மறை மற்றும் மகிழ்ச்சியான உணர்வுகள் அதிகரிக்கும். தினமும் யோகா, தியானம் போன்றவற்றையும் கடைபிடிப்பது மனதிற்கு சுகத்தை அளிக்கும்.

தூக்கம் மற்றும் ஓய்வு : நீங்கள் சோர்வாக இருந்தால் உங்கள் மனநிலையை நிர்வகிப்பது சற்று கடினமாக இருக்கும். எனவே உங்களுக்கு போதுமான தூக்கம் வருவதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகலில் சிறிது நேரம் தூங்குவதால் உங்கள் உடல் அதிக ஆற்றலைப் பெறவும், உங்கள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தவும் உதவும். மனநிலை மாற்றங்களை சமப்படுத்த, போதுமான தூக்கம் மற்றும் உங்களால் முடிந்த அளவு ஓய்வெடுக்க, முயலுங்கள். உங்கள் உடலுக்கு அது தேவை. பகலில் தூங்குவது மனநிலை மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

பிடித்த உணவை சாப்பிடுங்கள் : கர்ப்பகாலத்தில் உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு கிடைக்காவிட்டால் அளவுக்கு அதிகம் கோபம் ஏற்படும், அது சாதாரண உணர்வுதான். ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ஆசை என்று வெளியில் கிடைக்கும் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனிகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எதிர்வினைகளை நீங்கள் சம்பாதிக்க வேண்டிவரும். ஆரோக்கியமான உணவை பிடித்த வகையில் சாப்பிட்டு மகிழுங்கள். குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உணவு பட்டியலை உங்கள் துணையுடன் சேர்ந்து பின்பற்றுங்கள். நீங்கள் உண்ணும் உணவில் சரியான அளவு கலோரிகள், புரதங்கள் இன்ன பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியம் . தேவைக்கேற்ப தண்ணீர் குடிப்பது குழந்தைக்கும் நல்லது.

Related Articles

Close