பெற்றோரோடு தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்
பாதுகாப்பு உணர்வோடு அம்மாவுடனே குழந்தைகள் தூங்க விரும்பும். அதே குழந்தைகள் பத்து வயதைக் கடக்கும்போது பிரச்சினைகள் உருவாகிறது. 15 வயதுக்கு மேலும் அப்படி அம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
அதே நேரத்தில் சிறுகுழந்தைகளை பெற்றோர் தங்கள் இரு வருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர் களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா-பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரப் பெண்களின் நேரடிப்பார்வையிலோ தான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம் மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்…இதோ வரேண்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் ஏற்பட்டுவிடும்.
குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடு கிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.
அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.
நான்கு- ஐந்து வயது பருவத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். அந்தக் குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’ கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
ஏழெட்டு வயதில் குழந்தைகள் சிறுவர்- சிறுமியர் என்ற பருவத்தை அடைகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனி யறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.