புதியவைவீடு-தோட்டம்

வெள்ளிப் பொருட்கள் பளப்பளக்க

வெள்ளிப் பொருட்கள் பளப்பளக்க

பண்டிகை காலம் வந்து விட்டாலே பூஜைப் பொருட்களை சுத்தம் செய்து வைப்பது பெண்களின் முதல் வேலையாகி விடுகிறது. அதில் முக்கியமாக வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. கடையில் கொடுத்து மெருகு ஏற்றினால் எடை குறைவு ஏற்படுகிறது. சற்று சிரமம் பார்க்காமல் நாமே அதனை சுத்தப்படுத்தலாம்.
வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் முதலில் வெள்ளியில் கொலுசு, அரைநாண் கயிறு போன்றவற்றை தான் அணிவிக்கிறோம். பின்புதான் தங்க நகைகள் வருகின்றன. பூஜைக்கு சற்று வசதிப்படைத்தவர்கள் வெள்ளி பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அத்தகையப் பொருட்களை கவனமாக பராமரிக்க வேண்டும்.

வெள்ளித் தட்டுக்களில் உணவுப் பொருட்களை நீண்ட நேரம் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுப் பொருட்களில் உள்ள அமிலத்தன்மை வெள்ளித் தட்டை மங்கச் செய்யும். பாத்திரம் கழுவும் மெஷினில் வெள்ளிப் பொருட்களை போட கூடாது. முடிந்த வரையில் காற்று புகாத, வறண்ட குளிர்ச்சியான இடங்களில் குறிப்பாக பெட்டிகளில் வெள்ளிப் பொருட்களை வைத்து கொள்ள வேண்டும். மரப்பெட்டிகளில் வைப்பது சிறந்தது. இரும்பு பீரோ போன்றவற்றில் வைப்பதனால் சுத்தமான வெள்ளை மற்றும் பிரெளன் தாளினால் ஆன உறைகளில் போட்டு வைக்கலாம். பாலித்தீன் பைகளிலும் கூட போட்டு மூடி வைக்கலாம்.

வெள்ளிப் பொருட்களை ஒன்றாக வைப்பதை தவிர்த்து விட வேண்டும். அப்படி வைத்தால் ஒன்றோடொன்று உராய்ந்து கீறல்கள் ஏற்பட்டு பளபளபை குறைத்துவிடும். இதை தவிர்க்க வெள்ளிப் பொருட்கள்களை தனித்தனியாக பிரித்து மூடி வைக்க வேண்டும். முக்கியமாக வெள்ளியின் மீது செய்திதாள், ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். இப்படி பலவாறு அதை பராமரிக்க வேண்டும். எப்படி வைத்தாலும் வெள்ளிப் பொருட்களின் மீது காற்று பட்டால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கருக்கச் செய்கின்றன. இப்படி கருத்த வெள்ளிப் பொருட்களை நாம் வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்ள முடியும்.

இயற்கையில் சுத்தம் செய்ய பூந்தி கொட்டையை பயன்படுத்தலாம். தேவையான அளவு பூந்தி கொட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பார்த்தால் நுரை வர ஊறி இருக்கும். இதனை எடுத்து ஒரு மிக்ஸியில் அரைத்து கொண்டு அதனை ஊற வைத்த தண்ணியோடு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் வெள்ளிப் பொருட்களை மூழ்கும்படி செய்து குறைந்தது ஒரு மணி நனைய வைக்கவும். பின்பு சாதாரண பாத்திரம் தேய்க்கும் சோப்பினை மெல்லிய, மிருதுவான சல்பாஞ்ச், பிரஸ் அல்லது துணியினால் தொட்டு வெள்ளியை தேய்த்து கழுவ வேண்டும். இவற்றை இளஞ்சூடான வெந்நீரில் அலசி துணியினால் ஈரத்தை துடைத்து விட வேண்டும். நன்கு உலர்ந்த வெள்ளிப் பொருட்களை திருநீறு கொண்டு துடைத்தால் அவை பளபளவென்று மின்னுகின்றன.

உருளைக்கிழங்கை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சுத்தம் செய்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஓரளவு பெரிய பூவாக துறுவிக் கொள்ளவும் செய்யலாம். இதை ஒரு பாத்திரத்தில் சில மணி நேரம் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கை வடிகட்டி எடுத்து விட வேண்டும். வடிகட்டிய நீரை ஊற்றி வெள்ளிப் பொருட்களை அதில் ஒரு மணி நேரம் வரை நனைத்து இருக்க செய்ய வேண்டும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.

தயிர், எலுமிச்சை போன்றவற்றையும் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்பார்கள். ஆனால் அவை வெள்ளியை கரைக்கச் செய்யும். இது தவிர நல்ல பலன் தரக்கூடிய ஒரு வழி முறை உண்டு. ஒரு பாத்திரத்தில் வெள்ளிப் பொருட்களை முழுவதும் போடும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதில், ஓரிரு அலுமினியம் ஃபாயில் பேப்பரை கிழித்துப் போடவும். அதனோடு ஒரு தேக்கரண்டி சோடா உப்பை சேர்த்து கலக்கி விடவும். இதில் வெள்ளிப் பொருட்களை போட்டு மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தை அடிக்கடி திருப்பி விடவும். வெள்ளிப் பொருட்களை பளிச்சென்று ஆனதும் அடுப்பை அணைத்து விடவும். பின்பு வெள்ளிப் பொருட்களை எடுத்து துணியால் துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் கோல்கேட் பல்பொடி போன்றவை இருந்தால் அதை பயன்படுத்தியும் வெள்ளியை சுத்தம் செய்யலாம். நல்ல மிருதுவான தூரிகையை எடுத்து பல்பொடியை தொட்டு மெதுவாக தேய்த்து துணியால் துடைத்து எடுக்கலாம். இதனால் வெள்ளிப் பொருட்கள் சுத்தமாகி பளபளவென்று மினுக்கும். பற்பசையையும் பயன்படுத்தலாம். இது தவிர வேறு சில ரசாயனப் பொருட்களை கொண்டும் சுத்தம் செய்ய முடியும். ஆனால் அதற்கு சற்று எச்சரிக்கை தேவைப்படும். மேற்சொல்லப்பட்ட முறைகளால் நம் உடலுக்கு தீங்கு ஏதுமில்லை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker