ஆரோக்கியம்எடிட்டர் சாய்ஸ்புதியவை

தாம்பத்திய ஆசையில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

‘தாம்பத்ய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்ய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘இந்தியர்களின் தாம்பத்ய வாழ்க்கை எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் சுவாரசியமான பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

* தான் சொல்வதைக் கேட்டு மனைவி நடந்துகொள்ளவேண்டும் என்று 72 சதவீத ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். (முன்பு இந்த எண்ணம் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருந்தது கவனிக்கத்தகுந்தது)

* பெரும்பாலான ஆண்கள், மனைவி தங்களை குழந்தை போன்று பராமரித்து பாசம் செலுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அதில் 60 சதவீத ஆண்கள் தங்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவதாகவும் சொல்கிறார்கள்.

* உயர்ந்த கல்வியும், அதிக சம்பளத்துடன்கூடிய வேலையும் பெண்களுக்கு கிடைத்திருந்தாலும் அவர்களுக்கு உரிய முழு அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை என்பது 22 சதவீத ஆண்களின் கருத்தாக இருக்கிறது.

* 8 சதவீத ஆண்கள், வேலைபார்க்கும் தங்கள் மனைவி நண்பர்களுடனான பார்ட்டிகளில் பங்குபெறுவதை ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

* மனைவியின் அலுவலக நண்பர்கள் வீடு தேடி வந்து உரையாடிவிட்டு செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் என்று 52 சதவீத ஆண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

* மனைவி மீது அதிக பாசம் இருந்தாலும், மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் மனைவியை விட்டு விலகி இருப்பது பாசத்தை அதிகரிக்க உதவும் என்பது 70 சதவீத ஆண்களின் கருத்து. அதே நேரத்தில் அது சரியான முடிவுதான் என்று 48 சதவீத பெண்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவர் தங்களைவிட்டு ஒருசில நாட்கள் கூட விலகியிருக்க கூடாது என்றே இப்போதும் விரும்புகிறார்கள்.

* சினிமா கதாநாயகர்கள் போன்றவர்களோ, கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்களோ கணவராக வேண்டும் என்று முன்பு தாங்கள் எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், இப்போது அப்படிப்பட்ட கனவுகள் காண்பதில்லை என்றும், சராசரி மனிதர்களையே கணவராக எதிர்பார்ப்பதாகவும் 81 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

* தாம்பத்ய செயல்பாடுகளில் தங்களுக்கு முழுதிருப்தி ஏற்படுவதாக 38 சதவீத பெண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் கணவர் தங்களது கருத்துக்களை கேட்பதில்லை என்பது 48 சதவீத பெண்களின் குறையாக இருக்கிறது.

* ‘நாங்கள் தாம்பத்ய செயல்பாட்டு விஷயத்தில் புதுமைகளுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கணவர்தான் அதில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை’ என்பது 22 சதவீத நடுத்தர வயது பெண்களின் கருத்தாக பதிவாகி இருக்கிறது.

* கணவரிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு, ‘சுகாதாரத்தை கடைப்பிடிக்காதது, எப்போதும் எரிச்சலடைவது, அலட்சியமாக இருப்பது, பொறுப்பாக நடந்துகொள்ளாதது, புகைப்பிடிப்பது, பொய் சொல்வது, மது அருந்துவது..’ என்று நீளமாக பெண்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

இந்த கருத்துக்கணிப்பு பற்றி மனோதத்துவ நிபுணர் அளித்திருக்கும் விளக்கம் :

“இந்த சர்வேயில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கணவன்மார்களிடம் பிடிக்காதவைகளை பற்றி பெண்கள் வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு பாசிட்டிவ்வான கருத்தாக ஆண்கள் ஏற்றுக்கொண்டு, தங்களிடம் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை இனிக்கும்.

தாம்பத்ய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆணும், பெண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து கணவன்- மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். அதனால் எடுத்த எடுப்பிலே அவர்களுக்குள் ஐக்கியம் ஏற்பட்டுவிடாது. அதை புரிந்துகொண்டு படிப்படியாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இருவரும் முன்வரவேண்டும். அதற்கு அன்பும், நம்பிக்கையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் மிக அவசியம்” என்கிறார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker