ஃபேஷன்புதியவை

பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

இப்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக பள்ளிகளுக்குச் செல்லும்போது லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துச் செல்வார்கள். அந்த லஞ்ச் பாக்ஸ் அவர்களுக்குப் பிடித்த விதமாக இருந்தால் ரொம்பவே மகிழ்ச்சியோடு மட்டுமல்ல மறக்காமலும் எடுத்துச் செல்வார்கள்.

இப்ப்போது பல நகரங்களில் லாக்டெளன் தளர்த்தியிருப்பதால் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் பெரியவர்கள் லஞ்ச் பாக்ஸில் விருப்பமான உணவை எடுத்துச் சென்றுகொண்டிருப்பீர்கள். அதுவும் கொரோனா அச்சத்தால் ஹோட்டல்களில் சாப்பிட நினைப்பவர்கள்கூட வீட்டிலிருந்து லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துசெல்லத் தொடங்கியிருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்று

கடையில் விதவிதமான லஞ்ச் பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவையாகத்தான் இருக்கும். குழந்தைகளும் வண்ணம் வண்ணமாக இருக்கும் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைத்தான் வாங்கச் சொல்வார்கள். மேலும், அவர்களுக்குப் பிடித்ததுபோல ஆப்பிள், மீன், படகு போன்ற வடிவங்களில் இருக்கும். ஆனால், நீங்கள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் வாங்குவதைத் தவிர்க்கும்படி உணவியல் ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

குழந்தைகளோ பெரியவர்களோ காலையில் ஸ்கூல் அல்லது ஆபிஸ்க்கு நிதானமாகப் புறப்படுவது இல்லை. அவசரம் அவசரமாகத்தான் ஏதாவது மறந்துவிட்டு கிளம்பும் விதத்தில்தான் காலை பொழுது இருக்கும். அப்படியிருக்கையில், சமையல் ஒருபக்கம், புறப்படுவது ஒரு பக்கம் நடக்கும். எனவே, அந்தப் பரப்பரப்பான நேரத்தில் ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்ய முடியாது என்பது இயல்புதான். அதனால் சில விஷயங்களில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

‘சுடச் சுட இருக்கும் உணவை (சாதம், இட்லி, உப்புமா, சாம்பார், ரசம்… என எதுவாகினும்) அப்படியே லஞ்ச் பாக்ஸில் வைப்போம். அது பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் எனில், உணவில் உள்ள வெப்பத்தில் பாக்ஸின் உள் லேயர் பிளாஸ்டிக்கும் வெப்பமாகி இலகும். அது உணவோடு கலந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அந்த உணவைச் சாப்பிடும் குழந்தை அல்லது பெரியவர்களுக்கு வயிற்று தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, ஃபுட் பாய்சன், செரிமாண கோளாறு, வ‌யிற்றுப் புண் உள்ளிட்டவை’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

ஆனால், இது காலையில் கொடுத்து மாலையில் நடக்கும் ஒருநாள் விஷயம் அல்ல. நீண்ட நாள்கள் நடக்கும்போது நேரிடலாம். அதனால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கான லஞ்ச் பாக்ஸ்கள் பிளாஸ்டிக்கை கூடுமானவரைத் தவிருங்கள். அதற்குப் பதில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களைக் கொண்ட லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒருவேளை குழந்தைகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்தான் வேண்டும் என அடம்பிடிக்கக்கூடும். பெரும்பாலான வீடுகளில் அம்மாதிரி நடக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில், குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தரும் குழந்தை வளர்ப்புக்கு பலரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி, குழந்தை அடம்பிடித்து பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் கேட்டால், வாங்கிக்கொடுங்கள். ஆனால், அதில் சூடான உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீர்கள். காய்கறி, பழங்களை நறுக்கி சாலட் செய்து கொடுப்பது, பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப அந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைப் பயன்படுத்துங்கள்.

குழந்தைக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ள கேடுகளை அவர்களின் மொழிக்கு ஏற்ப சொல்லிக்கொடுங்கள். மாறாக, வலுக்கட்டாயமாக அதை மறுக்காதீர்கள். அப்படி மறுக்கும் விஷயங்கள் மீதுதான் குழந்தைகளுக்கு ஈர்ப்பு அதிமாகும். எனவே, கவனத்துடன் கையாளுங்கள்.

Related Articles

Close