உறவுகள்புதியவை

காலம் மாறுகிறது.. பெண்களின் கனவுகள் கரைகிறது..

 

அதிக காலம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாகும் சூழ்நிலை உருவாகிவிட்டதால், ‘தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.

காலம் மாறுகிறது.. பெண்களின் கனவுகள் கரைகிறது..

இந்தியாவில் முன்பெல்லாம் பெருமளவு குழந்தை திருமணங்கள் நடந்துகொண்டிருந்தன. அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சுட்டிக்காட்டி, ‘பொறுத்திருந்து, குறிப்பிட்ட பருவம் வந்த பின்பே திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என்று நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காலம் மாறியது. பெண்கள் படித்து முன்னேறினார்கள். சரியான பருவத்திலே திருமணத்திற்கு தயாரானார்கள். இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதிக காலம் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போட்டு முதிர்கன்னியாகும் சூழ்நிலை உருவாகிவிட்டதால், ‘தாமதிக்காமல் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் கட்டாயம் உருவாகியிருக்கிறது.

இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சமூகம் தவிக்கிறது. அதிகாலையில் எழுந்து, குளித்து, பளிச்சென்று உடை உடுத்தி, காபி போட்டு எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்கு போய், ‘என்னங்க எழுந்திருங்க.. காபி சாப்பிடுங்க..’ என்று கணவரிடம் சொன்ன காட்சியை பழைய சினிமாக்களில் மட்டுமே காணமுடிகிறது. ஏன்என்றால் அப்படிப்பட்ட பெண்கள் யாரும் இன்று இல்லை. கணவரின் கைகளை பற்றிக்கொண்டு, நகத்தை கடித்தபடி ஒன்றும் அறியாத அப்பாவிபோல் நடிக்கவும் இன்று எந்த பெண்ணும் தயார் இல்லை. தங்கள் பலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்ளவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள். அதுதான் அவர்களது திருமணக்கொள்கையிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

‘திருமணம் செய்துகொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வி இளம் பெண்களிடம் ஒரு கருத்துக்கணிப்பிற்காக கேட்கப்பட்டது. சமூக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த சர்வேயை நடத்தியது.

அதில் அவர்கள் அளித்த பதில் பலரையும் திகைக்கவைத்திருக்கிறது. ‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது சரி’ என்று 18 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். முன்பு 2 முதல் 6 சதவீதம் பெண்களே இந்த கருத்தை பதிவு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

65 சதவீதம் பெண்கள், ‘அப்படிப்பட்ட வாழ்க்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல..’ என்று கூறி ஆறுதல் அளித்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் ‘எதிர்காலத்தில் அந்த மாதிரியான வாழ்க்கை முறை பெருகிவிடும்’ என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆடம்பர திருமணங்கள் தேவையில்லை என்பதும் பெண்களின் கருத்தாக இருக்கிறது. ‘இரண்டு இதயங்கள் இணையத்தானே திருமணம். அதற்காக அவசியமில்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கவேண்டியதில்லை’ என்றும் கூறுகிறார்கள். இந்த கருத்து, ஆர்ப்பாட்டமான திருமணங்களில் பெண்களுக்கு விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

‘ஆடம்பர திருமணங்களில் உங்களுக்கு ஏன் விருப்பமில்லை?’ என்ற கேள்வியை சர்வேயில் அவர்களிடம் கேட்டபோது…

‘ஆடம்பர விழாக்கள் மூலம் திருமண வாழ்க்கையில் இணைந்த பெண்கள் பலர், கூண்டுக்குள் சிக்கிய கிளிகள் போன்று திணறிக்கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். பந்தத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் அவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். சிலரோ ‘அப்பாடா தப்பித்தோம்’ என்றபடி விவாகரத்து வாங்கிவிட்டு ஓடிவந்து விட்ட கதையும் எங்களுக்கு தெரியும். இப்படி பலவீனமாக இருக்கும் திருமண பந்தத்திற்கு, லட்சங்களில் செலவு தேவையில்லை. திருமண பந்தத்தையே காப்பாற்ற முடியாத நிலை இருக்கும்போது அதற்கு அள்ளிக்கொட்டி செலவு செய்வது அவசியமற்றது’ என்று கூறும் பெண்கள், திருமணத்தில் மத நம்பிக்கைகளையும், சடங்குகளையும் கைவிட தயாரில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.

சம்பிரதாயங்களை பேணிபாதுகாக்க தயாராக இருக்கும் இன்றைய இளம்பெண்கள், போகிற போக்கை பார்த்தால் காதலை கண்டுகொள்ளாமலே கழற்றிவிட்டுவிடுவார்கள் போல் தெரிகிறது. சர்வேயில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்கள் காதலை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘காதல் முறிந்து போனால் வாழ்க்கையே முடிந்துபோனது என்று பெண்கள் தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் பழங்கதை. இப்போது அதை ஒரு தோல்வியாகவே எடுத்துக்கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்கத்தொடங்கிவிடுவோம்’ என்று சர்வேயில் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் ‘காதல் ஒரு நல்ல பொழுதுபோக்கு. அதை அந்த பருவத்தில் அனுபவித்துப்பார்த்துவிடுவது நல்லது’ என்ற கருத்தை 30 சதவீத கல்லூரி மாணவிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அதிரடியான கருத்தும் உள்ளது. அந்த 30 சதவீத பெண்களிடம் ‘காதலித்தவர்களை திருமணம் செய்ய நீங்கள் ஆர்வமாவது காட்டுவீர்களா?’ என்று கேட்டபோது, ‘பெற்றோர் சொல்வதைத்தான் கேட்பேன். இறுதி வரை காதலுக்கு போராடும் குணமெல்லாம் எங்களிடம் கிடையாது. வாழ்க்கையில் காதலைத் தவிர வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை’ என்று கூறி, தங்களது புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker