டிரென்டிங்புதியவை

எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தர வீட்டை பராமரிப்பது எப்படி?

கனவு இல்லத்தை எவ்வளவு சிரத்தை எடுத்து கட்டுகிறோமோ? அதே அளவு அதனை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வீடு எப்போதும் புதுபொலிவுடன் காட்சி தரும். வீடு பராமரிப்பு ஒரு கலையாகவே கருதப்படுகிறது. வீட்டை பராமரிப்பதற்கு அதனை தூய்மையாக வைத்திருப்பதே முதன்மையான விஷயமாக இருக்க முடியும். பொதுவாக வீட்டில் உள்ள அறைகளை அடிக்கடி பெருக்கி வந்தாலே குப்பைகள் சேருவது குறைந்து சுத்தமாக காட்சி அளிக்க தொடங்கிவிடும்.

அதேபோல் வாரம் ஒரு முறையாவது வீட்டை கழுவி வருவதும் சிறப்பானதாக அமையும். சில பெண்கள் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், மாத பிறப்பையொட்டியும் வீட்டின் தரையை கழுவி சுத்தம் செய்வார்கள். வெள்ளை நிற வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்தால் வீடு தூய்மையாக மாறுவதுடன் பளபளப்பாகவும் காட்சி தரும்.

கதவுகளை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்து விட வேண்டும். ஜன்னல்களில் தூசி படிய வாய்ப்பு உள்ளதால் அதனை அடிக்கடி துடைத்து வருவது தூய்மையோடு உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். அதுபோல திரைச்சீலைகள், குஷன் கவர், சோபா கவர், மெத்தை கவர் போன்றவற்றை மாதம் ஒரு முறையாவது சலவை செய்துவிட வேண்டும். இது வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.

குளியல் அறைகளை சுத்தம் செய்யும்போது கரப்பான் பூச்சிக்கொல்லி, எறும்புக் கொல்லிகளை பயன்படுத்தி சுத்தம் செய்தால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். அதே போல் வீட்டை அலங்கரிக்கும் அலங்கார பொருட்களையும் அடிக்கடி துடைத்து சுத்தப்படுத்தினால் அவைகள் கண்கவர் அழகில் எப்போதும் காட்சி அளிக்கும். எப்போதுமே பொருட்களை எடுத்து பயன்படுத்திய பின்னர் அவற்றை மீண்டும் அதற்குரிய இடத்தில் திரும்ப வைக்கும் பழக்கம் வரவேண்டும்.

சிலர் பொருட்களை எடுத்து பயன்படுத்திய பின்னர் வேலை முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில் அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் போட்டுவிடுவார்கள். அப்படி செய்தால் பொருட்கள் அங்கும், இங்குமாக ஒழுங்கற்று கிடக்கும். அது அறையை பார்ப்பதற்கு அலங்கோலமாக இருப்பது போல் தோன்ற வைக்கும். அதனால் எந்த பொருட்களையும் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். மேலும் அறையின் எந்த இடத்தில் வைத்தால் எடுப்பாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு அலங்கரித்தால் அறை அற்புதமாக காட்சி அளிக்கும்.

அதேபோல் அறை சுவற்றில் உள்ள சிலாப்புகளில் ஏராளமான பொருட்களை போட்டு வைத்துவிடுவார்கள். அதை அடிக்கடி எடுத்து உபயோகப்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் அப்படியே நீண்ட நாட்கள் போட்டு விட்டால் பொருட்கள் தூசிபடிந்து பொலிவை இழக்க தொடங்கிவிடும். ஆகையால் வாரத்திலோ அல்லது மாதத்திலோ ஒரு முறையாவது எடுத்து சுத்தம்செய்துவிட வேண்டும்.

அலமாரிகள், சமையல் அறையில் பொருட்கள் வைக்கும் இடங்கள் போன்ற வற்றையும் தூசு தட்டிவிட வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டு விட்டால் குப்பைகள் சேர்ந்து விடும். எப்படியும் நாம்தான் சுத்தம் செய்யப்போகிறோம் என்பதை மனதில்கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்து வந்தால் குப்பை சேராது. அதுபோல் சுவர்களில் வெடிப்பு, கீறல் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் சரிசெய்து விடவேண்டும்.

அது தவிர குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் வீட்டுக்கு வர்ணம் பூசிவர வேண்டும். அது வீட்டுக்கு அழகை கூட்டுவதுடன், பராமரிப்பு பணியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டை வெறும் கட்டிடமாக பார்க்காமல் கனவு கட்டி எழுப்பிய கோட்டையாக என்றும் நினைத்து பராமரித்து வந்தால் வீடு பொலிவை இழக்காமல் அழகாக தோற்றமளிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker