ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு
மனிதன் என்றைக்கு சமையல் செய்து சாப்பிட தொடங்கினானோ, அன்றே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். உணவு தயாரிப்பதை ஆறு வகையாக சொல்லலாம். இயற்கை உணவுகள், பதப்படுத்தியவை, அவித்தல், வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் ஆகியவை ஆகும்.
பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து ‘சாலட்’ முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்றவற்றை இயற்கை உணவுகள் என சொல்லலாம். இவற்றில் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் மிகுந்து இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து மிகுந்திருக்கும் என்பதால் செரிமானம் விரைவாக நடக்க முடியும். அதனால் மலச்சிக்கல் வராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகமாக உண்டாகும்.
உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. அவை இயற்கை உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்கள் இந்த உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் நிஜம். இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிடாமல், சுவைக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
பாலை பதப்படுத்தி வைத்து தயிர், மோர், வெண்ணை என மாற்றுவது, திராட்சை போன்ற பழங்களை காய வைத்து பதப்படுத்தி சாப்பிடுவது, தானியங்களை ஊற வைத்து முளை கட்டிய பின்னர் அதனை அப்படியே சாப்பிடுவது. சர்க்கரையுடன் எலுமிச்சை கலந்து தேநீராக குடிப்பது என இயற்கை பொருட்களையே பல்வேறு மாற்றங்கள் செய்து சாப்பிடலாம். பெரும்பாலும் காட்டில் வாழும் ஆதிவாசிகள் இப்படிப்பட்ட உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள்.
செரிமானத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதால், உறுப்புகள் எளிதாக செயல்பட்டு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடலுக்கு நல்ல வலிமை தரும். நெருப்பு மூட்டி செய்யப்படும் சமையலில் மிக சிறப்பான உணவுகள் என்றால் அவித்தல் முறையில் பெறப்படும் உணவுகளே. இயற்கை உணவுகள் அல்லது தானியத்தை அரைத்து, திரித்து அவிக்கப்படும் உணவுகளும் செரிமானத்திற்கு எளிமையானதே. இட்லியும், இந்த வகையில் இடம் பெறுகிறது என்றாலும், அதிகமாக மாவு புளிப்படைவது உடலுக்கு நல்லதல்ல. அவித்தல் முறையில் சத்துக்கள் முழுமையாக வெளியேறி விடுவதில்லை என்பதாலும் உணவு செரிமானத்திற்கு அதிக தொந்தரவு இருக்காது என்பதாலும் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடியதே.
பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் உருளைக்கிழங்கு அவித்து கொடுப்பதும், நோயாளிகளுக்கு கஞ்சி, இட்லி போன்றவை கொடுப்பதும் ஓரளவு நாக்குக்கும் சுவையாக இருக்கும், செரிமானத்திற்கும் எளிதாக இருக்கும் என்பதால் தான். இதுவரை நாம் பார்த்து வந்த உணவு வகைகளில் எல்லாம் சுவைக்காக செயற்கை பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுவதில்லை. ஆனால் வேக வைக்கும் பொழுது மசாலா பொருட்கள் இடம் பெற தொடங்குகிறது. உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.