Uncategorised

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது எழும் சந்தேகங்கள்

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, டாக்டரிடம் ஆலோசனை பெற்று, மருந்துகளையும் வாங்கிவிட்டு வீடு திரும்பும் பெரும்பாலான இளந்தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு அந்த மருந்துகளை கொடுக்கும்போதுதான் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. அதற்கான பதில்கள்:

மருந்துகள் எப்போது கொடுக்கவேண்டும்?

நோய் பாதித்த குழந்தைகளை டாக்டரிடம் காட்டி, பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மருந்துகளை வாங்கி உடனடியாக கொடுக்க தொடங்கவேண்டும். மருந்தின் அளவு, தன்மை பற்றி கூடுதலாக ஏதாவது சந்தேகம் இருந்தால் மருந்து வாங்கும் பார்மசிஸ்டிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

எந்த அளவில் மருந்துகளை வழங்குவது?

டாக்டர் குறிப்பிடும் மருந்தினை, அவர் குறிப்பிடும் அளவில் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகளை சரியாக 8 மணி நேர இடைவெளியில் வழங்குவது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் மருந்தினை கொடுக்காமல் இருந்தால் உடலில் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கும், வைரஸ்கள் ஆன்டிபயாடிக்குகளோடு எதிர்வினையாற்றுவதற்கும் காரணமாகிவிடும். அதனால் குழந்தைகளிடம் நோய்த்தன்மை அதிகரித்துவிடும். டாக்டர் தினமும் மூன்று வேளை மருந்தினை கொடுக்க சொன்னால், தவறாமல் அதன்படி செய்யவேண்டும். மருந்து கொடுத்த சில மணி நேரத்திலே நோய் கட்டுக்குள் வந்து விடும் என்று கருதக்கூடாது. நோய்தன்மை குறைந்ததும் ஒருசில மருந்துகளை நிறுத்தவேண்டியதிருக்கும். அதையும் டாக்டரே குறிப்பிடுவார்.

மருந்தின் அளவுகளில் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கலாமா?

டாக்டர் ஒரு மருந்தினை 5 மி.லி. அளவு உட்கொள்ளவேண்டும் என்று கூறினால், துல்லியமாக அதே அளவில் குழந்தைக்கு வழங்கவேண்டும். அளவு மாறினால் நோய் குணமாகாது. சில குழந்தைகள் மருந்தினை விழுங்காமல் துப்பிவிடும். அந்த நேரங்களில் சரியான அளவில் மருந்து உடலில் சேர்ந்ததா என்ற சந்தேகம் தாய்மார்களுக்கு வந்துவிடும். அத்தகைய நெருக்கடிகள் ஏற்படாத அளவுக்கு கவனமாக குழந்தைகளுக்கு மருந்து புகட்டவேண்டும்.

சில மருந்துகள் தூள் வடிவத்தில் இருக்கும். கொதித்து ஆறிய நீரை அதில் சேர்த்து நன்றாக குலுக்கி அந்த மருந்தை தயார் செய்யவேண்டும். மருந்தில் சேர்க்கும் நீர் எந்த அணுத்தொற்றும் இல்லாததாக இருக்கவேண்டும். அந்த பாட்டிலில் குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் நீரை சேர்த்து நன்றாக குலுக்கி பயன்படுத்தவும்.

டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், வேறு கம்பெனி மருந்தை பயன்படுத்தலாமா?

கடையில் டாக்டர் குறிப்பிட்ட மருந்து கிடைக்காவிட்டால், மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு இன்னொரு கம்பெனி மருந்தினை வாங்குவதற்கு முன்னால், அந்த டாக்டரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதே சிறந்தது. குழந்தையின் நோய்த்தன்மை, இயல்பு, கிளினிக்கல் ஹிஸ்டரி போன்றவைகளை கருத்தில்கொண்டே டாக்டர் மருந்தினை பரிந்துரைப்பார். அதனால் மருந்தினை மாற்றி வாங்கும்போது டாக்டரின் ஆலோசனை கட்டாயம் தேவை.

குழந்தை மருந்து சாப்பிட மறுத்தால் என்ன செய்வது?

மாத்திரைகளை விழுங்க குழந்தை மறுத்தால் அதை டாக்டரிடம் கூறி திரவ மருந்துகளை பரிந்துரைக்கும்படி கூறலாம். குழந்தை மாத்திரைகளை விழுங்க மறுத்தால் அதனை சர்க்கரை கரை சலிலோ, தேன் கரைசலிலோ, பழச்சாறிலோ கலந்து வழங்கக்கூடாது. அதுபோல் உணவுப் பொருட்களில் கலந்தும் மாத்திரைகளை தரக்கூடாது. கொதித்து ஆறிய நீரில் மாத்திரைகளை தூளாக்கி கொடுக்கலாம். மாத்திரை மருந்துகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தால், நோயை தீர்க்க மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டியதாகிவிடும்.

அண்ணனுக்கு வாங்கிய மருந்தை தம்பிக்கு கொடுக்கலாமா?

ஜலதோஷம், இருமல் போன்றவைகளுக்கு அண்ணனுக்கு வாங்கிய மருந்துகளை, தம்பிக்கு அதே நோய்கள் ஏற்படும்போது கொடுத்துவிடக்கூடாது. ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை இன்னொரு குழந்தைக்கு கொடுப்பது தவறு. அதுபோல் நோய்த்தன்மையை கூறி மருந்துகடைகளில் மருந்துகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதும் ஆபத்தானது. டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையிலே மருந்துகளை வாங்கிகொடுக்கவேண்டும். நோய் தீர்ந்துவிட்டதுபோல் வெளிப்படையாக தெரிந்தாலும், டாக்டர் குறிப்பிடும் நாட்கள் வரை அந்த மருந்தினை கொடுப்பது அவசியம். குறிப்பிட்ட நாட்கள் வரை கொடுத்தால்தான் நோய் முழுமையாக நீங்கும். அதுபோல் மூடி திறக்கப்பட்ட பழைய மருந்துகளையும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker