ஃபேஷன்புதியவை

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்திற்கு வித்திட்டுவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் பொடுகு, பேன் தொல்லைகள் தலைதூக்குகின்றன.

பொதுவாக பொடுகுடன் தொடர்புடைய மலாசீசியா எனும் பூஞ்சை வகை உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மலாசீசியா கோடை காலங்களில் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கி மழைக்காலத்தில் வளர்ச்சி அடையத்தொடங்கும். அதனால்தான் மழைக்காலத்தில் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச் சினைகள் உண்டாகும்.

மழைக்காலத்தில் அவ்வப்போது ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவினால் மலாசீசியா வளர்ச்சியை குறைத்து விடலாம். அதற்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட ஷாம்புவை பயன்படுத்தலாம்.

குளித்தாலோ அல்லது மழையில் நனைந் தாலோ உடனடியாக கூந்தலை உலர வைப்பது முக்கியமானது. ஏனென்றால் அதிகப்படியான ஈரப்பதம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பேன் வளர்ச்சி அடைவதற்கு உகந்ததாக இருக்கும். ஒருபோதும் தலைமுடி ஈரமாக இருக்கும்போது பின்னக்கூடாது.

ஈரப்பதம் மயிர்க்கால்களை பலவீனமாக்கிவிடும். அதனால் தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீப்பு கொண்டு சீவக்கூடாது. தேவைப்படும்பட்சத்தில் அகன்ற பற்களை கொண்ட சீப்பை உபயோகிக்க வேண்டும். அது தலைமுடி அதிகம் சேதமடைவதை தடுக்கும்.

ஹேர் ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட கூந்தல் தயாரிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மழைக்காலத்தில் தலைமுடி மற்றும் உச்சந்தலையை மேலும் சேதப்படுத்தும்.

தலைமுடி ஆரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் புரதம் அவசியம். முட்டை, கீரை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், தயிர், சோயா பீன்ஸ் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் உடல் குளிர்ந்து போனாலும் கூந்தல் வறட்சித்தன்மையுடன்தான் காணப்படும். அதனால் கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் ஹேர் கண்டிஷனர்களை உபயோகப்படுத்த வேண்டும்.

முட்டையும், தயிரும் சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியவை. அகன்ற பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிட்டு அதனுடன் மூன்று டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனை தலையில் தேய்த்துவிட்டு அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம். இதன் மூலம் முடி உதிர்வு, முடி வெடிப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்து விடலாம்.

ஆப்பிள் சிடேர் வினிகரும் சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படக்கூடியது. ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகரை கலந்து தலையில் தடவி வரலாம். இது கூந்தலை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

கற்றாழை ஜெல்லும் கூந்தலை பொலிவாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய்யை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு கூந்தலில் தடவலாம். உலர்ந்ததும் கூந்தலை நீரில் அலசி விடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker