ஃபேஷன்புதியவை

புதிய வேலை… இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க…

நீங்கள் எதிர்பார்த்ததுபோலவே ஒரு வேலைக்கான இண்டர்வியூக்குச் சென்று வந்துவிட்டீர்கள். மிகச் சிறப்பாக இண்டர்வியூவை எதிர்கொண்டதால் வேலைக்கான ஆபர் லெட்டரும் வந்துவிட்டது. நல்ல விஷயம்தான். ஆனால், புதிய வேலை ஏற்று, பணியில் சேரும் முன் இந்த 5 விஷயங்களைச் செக் பண்ண மறக்க வேண்டாம்.

* நீங்கள் இதுவரை பார்த்த வேலைக்கு கிடைத்த சம்பளத்தைவிட அதிகமாக இருக்கிறதா அல்லது இப்போது பார்க்கப் போகும் வேலைக்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் செக் பண்ணுங்கள். ஏனெனில், ஊதிய உயர்வுகள் குறித்து கொடுக்கப்படும் நம்பிக்கைகள் எல்லாமே இப்போதைக்கு வெறும் சொற்கள்தான். கொடுக்கப்படும் சம்பளமே கவனிக்கத்தக்கது.

* உங்களின் எதிர்கால இலக்குகளுக்கு இந்த வேலை எந்த வகையில் உதவும் என்பதைப் பாருங்கள். ஏனெனில், சினிமா தொடர்பான இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத வேலை ஒன்றில் பணியாற்றுவது சாத்தியமே இல்லை. ஏனெனில், மனம் ஒன்ற அந்த வேலையில் இணைய முடியாது. அதனால், முழு ஈடுபாட்டைக் காட்ட முடியாது. நல்ல பெயரையும் பெற முடியாது. பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளை நினைத்தும் பார்க்க முடியாது. அதைவிடவும் முக்கியம் உங்கள் வாழ்க்கை இலக்குக்காக உழைக்கும் நேரத்தை வேறொன்றுக்காக செலவழித்துக் கழித்துக்கொண்டிருப்பீர்கள்.

* பணியில் சேர அழைப்பு தரும் நிறுவனத்தின் விதிகளை செக் பண்ணுங்கள். சில நிறுவனங்கள் தொழிலாளர்களை அங்குள்ள ஒரு கருவியைப் பார்ப்பதைப் போலவே கருதும். வார விடுப்பு, வேலை நேரம் நிர்ணயம் இவற்றில் கருணையே இல்லாமல் இருக்கும். கருணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பணியாளர் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருக்கக்கூடும். அதனால், அப்படியான கெடுபிடி நிறுவனங்களில் சேர்ந்துவிட்டு பின் வருந்துவதில் அர்த்தமில்லை. எனவே வேலையில் சேர்வதற்கு முன் கவனிப்பதே சரியானது.

* உங்களை வளர்த்துக்கொள்ள அந்நிறுவனமோ அந்த வேலையோ உதவுமா? ஆம் இதுவும் முக்கியம். நீங்கள் செய்யும் வேலையினால் அந்த நிறுவனம் பொருளீட்டிக்கொள்ளும்; வளர்ந்துகொள்ளும். அதேபோல அங்கு பணிபுரியும் நீங்கள் சம்பளம் பெறுவதுடன், உங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்றும் பாருங்கள். இல்லையெனில், அந்த வேலையிலிருந்து வெளியே வரும்போது இப்போதைய திறனோடு மட்டுமே மற்றொரு வேலையைத் தேட வேண்டியிருக்கும்.

* நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சமூகத்தில் நல்ல பெயரோடு இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிச் சொல்வதற்கு காரணம், தவறான காரியங்களில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்பதற்காகத்தான். ஏனெனில், மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சிக்கலைத் தரும் நிறுவனம் எனில், அதன் பெயர் கெடும்போது உங்களுக்கும் சிக்கலே. அடுத்த வேலை தேடவும் பெரும் இடையூறாகவே அமைந்துவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker