ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

தேமல் வரக்காரணம்… தீர்க்கும் வழிமுறையும்

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோலில் தோன்றும் நோய்களுள் ‘பங்கஸ்’ என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொது சுகாதார குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தோலில் ஏற்படுகிற காளான் நோய்களில் முதல் இடம் பெறுவது தேமல் நோய். ‘மலேசேசியா பர்பர்’ எனும் கிருமியால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது.

மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் படையைச் சுற்றி ஓர் எல்லைக்கோடு காணப்படுவதும் சிறிதளவு அரிப்பு ஏற்படுவதும் இயல்பு. வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் அடிக்கடி தொல்லை தரும்.

இன்றைய நவீன மருத்துவத்தில் தேமலைப் போக்க பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி களிம்பு, பவுடர்களில் ஒன்றை சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.

சுய சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம். இந்த கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை.

எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடம் இருந்தும் இது பரவ வாய்ப்பு உள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணில் இருந்து கிருமிகள் பரவி நோய் வருவது உண்டு. காளான் நோய்க்கு ‘டீனியா தொற்று’ என்பது மருத்துவ பெயர். இதை ஏற்படுத்தும் கிருமிகள் பல. அவற்றுள் மைக்ரோஸ்போரம், டிரைகோபைட்டன், எபிடெர்மோபைட்டன் முக்கியமானவை. முதல் 2 கிருமிகள் தோலையும் முடியையும் பாதிக்கின்றன. மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கிருமி தோலையும் நகங்களையும் பாதிக்கக்கூடியது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker