ஃபேஷன்புதியவை

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை சில்லுனு மாற்ற வேண்டுமா இதை முயற்சி செய்யலாமே

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், மார்கெட்டில் உடலையும், சருமத்தையும் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும் பழங்களின் விற்பனை அதிகரித்துவிட்டது. இதனால் பல பழங்கள் விலைக் குறைவில் கிடைக்கிறது. இப்படி விலைக்குறைவில் பழங்கள் கிடைக்கும் போதே, அவற்றை முடிந்த அளவு சாப்பிட்டும், பயன்படுத்தியும் கொள்வது தான் புத்திசாலித்தனம்.
கோடையில் அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். மேலும் வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, சருமம் பயங்கரமாக எரியும். அதோடு, கோடையில் தான் பருக்கள், வியர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும்.

இக்காலத்தில் விலைக்குறைவில் கிடைக்கும் தர்பூசணியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், கோடையில் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த தர்பூசணி ஃபேஸ் பேக்குகளைப் பார்ப்போம்.

தர்பூசணி மற்றும் தயிர்

வறட்சியான சருமத்தினருக்கு இது ஏற்றது. தர்பூசணி ஜூஸ் மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் தயிர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும் மற்றும் தர்பூசணி சரும செல்களில் உள்ள பாதிப்பை சரிசெய்யும்

தர்பூசணி மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் மட்டுமின்றி கை, கால் முழுவதும் தடவி, ஊற வைத்துக் கழுவுங்கள். இதனால் சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, முகப்பரு பிரச்சனையும் தடுக்கப்படும்.

தர்பூசணி மற்றும் அவகேடோ

தர்பூசணி மற்றும் அவகேடோ இரண்டிலுமே வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் உள்ளது. முக்கியமாக அவகேடோவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது முதுமையைத் தடுக்கும். அதற்கு அவகேடோ மற்றும் தர்பூசணி சாற்றினை ஒன்றாக கலந்து, முகத்திற்கு பயன்படுத்தி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

தர்பூசணி மற்றும் தேன்

கோடையிலும் சரும வறட்சியை சந்திப்பவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்தது. அதற்கு தர்பூசணி சாற்றுடன் சிறிது தேன் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் வெயிலால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறுவதோடு, சரும எரிச்சலும் தடுக்கப்படும்.

தர்பூசணி மற்றும் பால் பவுடர்

பால் பவுடரை தர்பூசணி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, சரும கருமையும் நீங்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker