உறவுகள்புதியவை

பெண்களை மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தினால்…

கணவனை இழந்துவிட்ட மனைவி அன்றாட வாழ்க்கையில் மிகவும் தடுமாறிப்போகிறார்கள். அதோடு குழந்தையும் இருந்தால், அதனை வளர்க்க அவர்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோரும் உறவினர்களும் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். இந்த மறுமணம் அவர்கள் வாழ்க்கையை நறுமணமாக்கும் விதமாக அமையவேண்டும்.

நன்றாக அறிமுகமான பெண்ணாக இருப்பது நல்லது என்று சொல்லி மனைவியின் தங்கையையே திருமணம் செய்து கொள்ள முற்படுகிறவர்கள் அதிகம். வீட்டுப் பெரியவர்களும் அதற்கு ஒத்துழைப்பார்கள். அதன் முடிவு, அந்த பெண்ணின் மனதிற்குப் பிடிக்காத ஒரு கட்டாய திருமணம் போல் ஆகிவிடக்கூடாது. அந்தப் பெண் ஏற்கனவே யாரையாவது மனதில் நினைத்திருந்தால் அவனைத் தூக்கி தூரவீசிவிட்டு, இந்த தியாக வாழ்க்கையில் இறங்க வேண்டியிருக்கும். அந்த வாழ்க்கை இருவருக்குமே நறுமணம் தராது.

கணவனை இழந்த எல்லா பெண்களையும் மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அவர்கள் நன்றாக சிந்திக்கவேண்டும். சிந்தித்து தனக்கு மறுமணம் அவசியம் என்று உணரும்பட்சத்தில் அவசரப்படாமல் அவருக்கு மணமகனை தேடவேண்டும். அதற்கான திருமண தகவல் மையங்களில் தகவல் பெறுவதாக இருந்தால், அந்த தகவல்கள் உண்மையா என்பதை தீர விசாரிக்க வேண்டும். கூடுமானவரை நன்கு அறிமுகமான ஆணை தேர்வு செய்து அவர்கள் விருப்பத்துடன் மணமுடிப்பது அவசியம்.

மறுமணம் செய்துகொள்ளும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. ‘தங்களுக்கு மறுமணத்தில் அவ்வளவு பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்’ என்பார்கள். குழந்தைகளுக்காக அம்மா செய்துகொள்ளும் மறுமணம் பெரும்பாலும் வெற்றியடையாது. வளர்ந்த குழந்தைகளால் சுலபமாக புதிய அப்பாவை ஏற்றுக்கொள்ள முடியாது.

குழந்தைகளை மட்டும் மனதில்வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை தேர்வு செய்தால், அவள் வீட்டில் ஆயா வேலை பார்ப்பவள் போல் ஆகிவிடுவாள். தனக்கும் அந்த ஆயா போன்ற பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் மறுமண கணவர் நடந்துகொள்வார். அதனால் அந்த பெண்ணுக்கும் திருப்தியான வாழ்க்கை கிடைக்காது. அவருக்கும் திருப்தி கிடைக்காது. மறுமணத்தில் வாழ வரும் பெண்ணின் மனநிலையும் மிக முக்கியம். மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker