எண்ணெய் பசை, வறண்ட சருமத்திற்கு முலாம் பழம் தரும் அழகு
முலாம் பழத்தை ஜூஸாக பருகுவதோடு மட்டுமின்றி சரும அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம். எண்ணெய் பசை மற்றும் வறண்ட தன்மை கொண்ட சருமத்திற்கு முலாம் பழம் இதமளிக்கும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும்.
* எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் கடலை மாவுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழ், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பசை போல் ஆக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். அதன் பிறகு கற்றாழை ஜெல் தடவலாம்.
* வறண்ட சருமம் கொண்டவர்கள் 1 டீஸ்பூன் பால் பவுடருடன், 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை சேர்த்து குழைத்து சருமத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஏதாவதொரு மாஸ்சரைசரை லேசாக தடவிக்கொள்ளலாம்.
* 1 டீஸ்பூன் ஓட்ஸ் கூழுடன் 2 டீஸ்பூன் முலாம் பழ கூழை கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
* முலாம் பழ கூழையும், ரோஸ் வாட்டரையும் சம அளவு கலந்து ஈரமான கூந்தலில் தடவ வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கூந்தலை அலசி விட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் கூந்தல் பளிச்சென்று ஜொலிக்கும்.
* முலாம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. அது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் உள்ள வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நச்சுகள் உள்ளிட்ட நோய் கிருமிகளை அழித்து வெளியேற்றவும் செய்யும்.
* கண்களின் ஆரோக்கியம் காக்கவும் முலாம் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது. அதிலிருக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட் பீட்டா கரோட்டின், ஜியாசாந்தைன் போன்றவை கண் பார்வை திறனை மேம்படுத்த உதவும்.