உறவுகள்புதியவை

கொரோனாவால் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்குழப்பங்கள்

சிறுவர்-சிறுமியர்கள் எப்போதுமே துறுதுறுப்பாக செயல்படக்கூடியவர்கள். பள்ளிகள் திறந்திருந்தால் அவர்களது துறுதுறுப்பிற்கு ஏற்ற சுறுசுறுப்பான பணிகள் இருந்துகொண்டிருக்கும். படிப்பார்கள்.. ஓடுவார்கள்.. விளையாடுவார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்திருந்த காலகட்டத்தில் அவர்களது சுதந்திர வாழ்க்கை இயல்பாக நடந்துகொண்டிருந்தது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு அவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடப்பது, அவர்களது இயல்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

கொரோனாவால் சக நண்பர்களான மற்ற குழந்தைகளை பார்க்க முடியாததும், அவர்களோடு விளையாட முடியாததும் சிறுவர்-சிறுமியர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டிற்குள்ளே அடைபட்டுக்கிடப்பதால் அவர்கள் அதிக கோபமும் கொள்கிறார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். குழுவாக அவர்கள் பிரிந்து வெளிவிளையாட்டுகளை விளையாடும்போது தோல்விகளை தாங்கும் பக்குவம் அவர்களிடம் ஏற்படும். இப்போது விளையாட முடியாமல் அவர்கள் வீட்டிற்குள்ளே இருப்பதால் சிறிய தோல்வியைகூட தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு மிக அவசியம் என்பதால் அதை ஊக்குவிக்கும் விதத்தில் பெற்றோரே அவர்களுடன் சேர்ந்து தினமும் ஒரு மணிநேரமாவது விளையாடவேண்டும். தாத்தா, பாட்டிகளும் விளையாட்டைத் தொடரலாம். குழந்தைகளை பல நாட்கள் வீட்டிற்குள்ளே பூட்டிவைத்தால் அவர்களின் இயல்பான சுபாவத்தில் மாற்றம் உருவாகும். அளவுக்கு அதிகமாக அடம்பிடிப்பது, மூச்சுவாங்கும் அளவுக்கு தொடர்ந்து அழுவது போன்றவைகளில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, இயல்புக்கு கொண்டு வருவதுதான் இதற்கு தீர்வு.

குழந்தைகள் கோபத்தில் கத்தும்போது பெற்றோரும் பதிலுக்கு கத்துவது அதற்கு தீர்வாகாது. ஒருவேளை அந்த நேரத்தில் பெற்றோரின் கத்தலுக்கு குழந்தை அடங்கிப்போவதுபோல் தோன்றினாலும், அடுத்து இருமடங்காக அடம்பிடிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

குழந்தைகளை வீட்டிற்குள்ளே உட்காரவைப்பது அவர்களது உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறையை உருவாக்கும். உடலுக்கு தேவையான இந்த சத்து, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இது இன்றியமையாதது. காலை எட்டு மணிக்கு முன்போ, மாலையில் ஐந்து மணிக்கு பின்போ குழந்தைகளை சிறிது நேரம் வெயிலில் நிற்க அனுமதிக்கவேண்டும். அந்த நேரத்தில் பால்கனியில் விளையாட அனுமதிக்கலாம்.

வழக்கமாகவே சிறுவர்-சிறுமியர்கள் உடல் பருத்து காணப்படுகிறார்கள். இப்போது கொரோனா அவர்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வீடுகளுக்குள்ளே இருந்ததால் கூடுதல் எடைபோட்டிருக்கிறார்கள். வெளியே செல்லாததும், விளையாடாததும் அதற்கு காரணமாக இருந்தாலும், உணவிலும் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது கவனிக்கவேண்டிய அம்சம். குழந்தைகளின் உடல்எடை அதிகரிப்பது அவர்களது எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கும். அதனால் குழந்தைகளுக்கு அளவோடு ஆரோக்கியமான உணவுகளை மட்டும் கொடுங்கள்.

டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதும், சும்மாவே உட்கார்ந்திருக்கும் நேரங்களிலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது குழந்தைகளின் பழக்கமாக இருக்கிறது. வறுத்தது, பொரித்தது, இனிப்பு பலகார வகைகளை அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவைகளில் கலோரியும், கொழுப்பும் அதிகமிருக்கும். அவை உடலுக்கு ஏற்றதல்ல. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்துங்கள். கேரட், முட்டைக்கோஸ், கீரை வகைகள், பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வழிகாட்டவேண்டும். இவை பசியை உடனே போக்கும். கலோரியும் மிக குறைவு. மலச்சிக்கல் போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker