உலக நடப்புகள்புதியவை

ஆயுள் காப்பீட்டின் அவசியம்

நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு, கிராமப்புறங்களுக்கு இன்னும் பெரிய அளவில் போய்ச் சேரவில்லை என்பது உண்மை. இதற்கு காரணம் நமது மக்களிடம் இருக்கும் மனத்தடைகள்தான். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் காப்பீடு எடுத்துள்ளவர்கள் வெறும் 35 கோடி பேர்தான் என்கிறது புள்ளிவிவரங்கள். ஆயுள் காப்பீடு எடுத்தால் ஆயுசு குறையும் என்கிற மூடநம்பிக்கை இப்போதும் மக்களிடையே இருக்கத்தான் செய்கிறது.

அதாவது, இறப்பை எதிர்பார்த்து காப்பீடு எடுக்கப்படுகிறது என்கிற தவறான புரிதல் இன்னும் மாறவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே காப்பீடு பாலிசி எடுத்துள்ளவர்கள் நிலை என்னவாக இருக்கிறது, எத்தனை பேர் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்கிற விவரங்களை பார்க்கிறபோது அதுவும் நெகட்டிவாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பலரும் பாலிசியை தொடராமல் விட்டு விடுகின்றனர் என்கிறது புள்ளி விவரங்கள்.

பொதுவாக வீட்டில் இருந்து வெளியே கிளம்புகிறோம் என்றால் யாருக்கு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்த நிலையில் வீட்டில் வருமானம் ஈட்டுபவருக்கு எடுக்கப்படும் ஆயுள் காப்பீடு பாலிசிகள்தான் அவருக்கு பிறகு அவருடையை குடும்பத்தை காப்பாற்றும் ஆதார சக்தியாக இருக்க முடியும். நாம் இந்த விஷயங்களை தெரிந்தே தவிர்க்க முடியாது.

இந்தியாவில் ஆண்டுக்காண்டு சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. என்னதான் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும், எதிரே வருபவர் உங்களைப்போல விதிமுறைப்படிதான் வாகனத்தை ஓட்டுவார் என்று சொல்ல முடியாது. இப்போதைய நமது வருமானத்தை போல, நமக்கு பிறகு நமது குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என்கிற புரிதலோடு காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிறகு கிடைக்கும் காப்பீடு தொகையை கொண்டு நமது குடும்பம் இதே வாழ்க்கை தரத்தோடு வாழ வேண்டும். இதற்கு தற்போதைய ஆண்டு வருமானத்தைபோல 10 முதல் 15 மடங்கு தொகைக்கு காப்பீடு பாலிசி இருக்க வேண்டும். எனவே இந்த புரிதலோடு ஆயுள் காப்பீட்டை அணுக வேண்டும் என்கின்றனர் காப்பீடு ஆலோசகர்கள்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker