வீட்டிலேயே பெண்களின் சரும அழகிற்கும் சிறந்த காபி பேஷியல் செய்வது எப்படி?
அழகு நிலையங்களுக்கு செல்ல விரும்பாத கல்லூரி மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்கள் அழகை பராமரித்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களையும், பழங்களையும், காய்களையும், மூலிகைகளையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி அழகை பேணுகிறார்கள். ‘வீட்டில் இருந்தபடியே பெண்கள் முக அழகை பேணுவதற்கு காபி பேஷியல் ஏற்றது’ என்று, அழகுக் கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.
புரூட் பேஷியலில் தொடங்கி ஒயின் பேஷியல் வரை எத்தனையோ மசாஜ் முறைகள் இருக்கின்றன. அதில் எளிதானது இந்த காபி பேஷியல். பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த சத்துணவுகள் அவசியம் என்பது போல் சரும அழகிற்கும் சிறந்த பேஷியல் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி எடுத்து ஆரோக்கியத்தை தருகிறது. அதுபோல் அவர்கள் பயன்படுத்தும் பேஷியலில் இருக்கும் பொருட்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கும். சிறந்த முறையில் பேஷியல் செய்யும்போது முகத்தில் உள்ள தசைகள் வலுவடையும். தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைத்து, முகம் எப்போதும் புத்துணர்ச்சியாக காணப்படும்.
காபி பேஷியல் எப்படி செய்ய வேண்டும்?
இன்ஸ்டன்ட் காபி பவுடருடன் பாதாம் பருப்பு அல்லது பட்டர் புரூட்டை அரைத்து சேர்த்தால் பேஷியலுக்கான மூலப்பொருள் கிடைத்து விடும். முதலில் ஸ்கிரப் மூலம் முக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கம் செய்யவேண்டும். சருமத் துவாரங்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு மசாஜ் செய்வது அவசியம். அப்போது சருமத்தில் இருக்கும் ஓட்டை வழியாக ஈரப்பதம் ஊடுருவிச் சென்று சருமத்தில் இருக்கும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். பின்பு கலந்து வைத்திருக்கும் காபி பேஷியல் பொருட்களை கொண்டு முகத்திற்கு ‘பேக்’ போடுங்கள். கண்கள், காதுகள், உதடுகள், மூக்குத்துவாரங்களில் படாத அளவுக்கு இந்த பேஷியலை போட்டுக்கொள்ளவேண்டும். நெற்றியோடு ஒட்டியிருக்கும் முடியிலும் படக்கூடாது. அரை மணி நேரத்தில் நன்றாக காய்ந்துவிடும். பின்பு கழுவிவிடலாம்.
இந்த காபி பேஷியல் ஒரு மாதம் வரை பலன் தரும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இதனால் கூடுதல் பலன் கிடைக்கும். முகம் முக்கியமான வர்மப் புள்ளிகள் அமைந்திருக்கும் இடம் என்பதால், அதில் முறைப்படியாக பேஷியல் செய்யும்போது நச்சுப் பொருட்கள் வெளியேறி தலைவலி, தூக்கமின்மை போன்றவை அகலும். சைனஸ் பிரச்சினையும் நீங்கும்.
பொதுவாக வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடு மிக குறைவாக இருக்கும். அதனால் முகப்பரு தோன்றாது என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களது முகசருமம் விரைவாக சுருங்கத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
காபியில் ‘காபின்’ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் இளமையாக வைத்திருக்க துணைபுரிகிறது. பேஷியல் செய்யும்போது காபித் தூளில் இருக்கும் மணம் சுவாசத்தின் வழியாக மூளைக்கு செல்கிறது. அங்குள்ள செல்களைத் தூண்டி புத்துணர்ச்சி தருவதால் மன அழுத்தமும் நீங்கும். அதனால் காபி அருந்தும் பழக்கம் இல்லாத கல்லூரி மாணவிகள்கூட மாதத்தில் ஒரு நாள் வீட்டிலேயே ‘காபி பேஷியல்’ செய்துகொள்ளலாம்.