பெண்கள் திருமணத்திற்கு முன் கட்டுடலுடன் வலம் வர வேண்டுமா?
பெண்களில் பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு தயாராகும்போதுதான் தங்கள் உடல்மீது அக்கறைகொள்ளத் தொடங்குகிறார்கள். முதலில், உச்சி முதல் பாதம் வரை தாங்கள் அழகாக ஜொலிக்கவேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அடுத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து கட்டுடலுடன் தோன்ற விரும்புகிறார்கள். அதோடு நல்ல உணவு முறைக்கு திரும்பி தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆர்வம்காட்டுகிறார்கள். அப்போது ஒருபுறம் ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். மறுபுறம் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள். மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்க தயாராக இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிருந்து அக்கறை செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம்.
உணவுக் கட்டுப்பாடு: உணவுக் கட்டுப்பாடு பெண்களுக்கு மிக அவசியம். ஆனால் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, தளர்ந்து, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கி விடும். அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும். அதற்குரிய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏன்என்றால் உணவு முறை என்பது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு தனி நபரின் உடல்வாகு, வயது, வேலை, தூக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து நிபுணர்கள் உணவை பரிந்துரைக்கிறார்கள். அதனால் உங்களுக்கான சரியான உணவை பரிந்துரைக்க அதற்குரிய நிபுணரை நீங்கள் சந்திப்பதே சிறந்தது. அதற்கு நீங்கள் விரும்பாவிட்டால் சத்தான உணவை வீட்டிலே சமைத்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்வியல் முறைகளையும் சரியாக்கிக்கொள்ளுங்கள்.
எடை குறைப்பு: உடல் குண்டாக இருப்பவர்கள், ‘பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது’ என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், ‘நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்களும், உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த அளவிற்கு அவர்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படத்தான் செய்யும். எடை குறையும்போது மணப்பெண்களுக்கு தன்னம்பிக்கையும், அழகும் அதிகரிக்கும்.
எல்லா பெண்களும் அதிக எடை கொண்டவர்களாக இருப்பதில்லை. சிலர் போதுமான எடையின்றி ஒல்லியாகவும் தோன்று கிறார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதி கரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ‘வெயிட் டிரைனிங்’ போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோசனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகிவிடும்.
குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்து விடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.
வீட்டிலே செய்யலாம்: ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன்தரும்.
ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவிகள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கவேண்டும்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள், ‘காலை முழுவதும் வேலை இருக்கிறது. மாலை நேரத்தில் வந்து பயிற்சி பெறுகிறோம்’ என்று தள்ளிப்போடக்கூடாது. அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.
முதல் ஐந்து நிமிடங்கள்: பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங்கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
மணப்பெண்களுக்கு அழகைவிட ஆரோக்கியம் மிக முக்கியம். கட்டுடலையும், ஆரோக்கியத்தையும் மேஜிக் போன்று உடனடியாக பெற்றுவிட முடியாது. அதற்கு கடுமையான பயிற்சியும், முயற்சியும், போதுமான கால அளவும் தேவை. அதனால் திருமணம் பேசி முடித்த பின்பு உடலை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து பெண்கள் அலட்சியம் காட்டாமல், எப்போதும் உடலில் அக்கறை செலுத்துங்கள். அதை இன்றே இப்போதே நடைமுறைப்படுத்துங்கள்.