ஆரோக்கியம்புதியவை

தினமும் ‘ஸ்கிப்பிங்’ செய்தால்…

குழந்தைகள் விரும்பி விளையாடும் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளுள் ஒன்றாக ‘ஸ்கிப்பிங்’ அமைந்திருக்கிறது. வீட்டின் முற்றங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் என எந்த இடத்திலும் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம் என்பதால் குழந்தைகள் மட்டுமின்றி எல்லா வயதினருக்கும் ஏற்றதாகவும், சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது.

உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் உள்பட பிற வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை தவிர்ப்பதற்கு ஸ்கிப்பிங் பயிற்சி சிறந்தது என்று ஐரோப்பிய ஜர்னல் ஆப் அப்ளைடு பிசியாலஜி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

எடை குறைதல்: உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும் சிறந்த பயிற்சி முறையாக ஸ்கிப்பிங் விளங்குகிறது. ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.

தசைகள்: ஆரம்பத்தில் சில நாட்கள் ஸ்கிப்பிங் செய்த பிறகு உடல் வலியை உணரலாம். முன்பைவிட கை, கால் தசைகள் அதிகமாக வேலை செய்வதால் இந்த பிரச்சினை ஏற்படும். இருப்பினும் கை, கால்களில் உள்ள தசைகள் வலு வடைவதற்கு உதவும் முழு உடற்பயிற்சியாக இது அமையும். உற்சாகத்துடன் செயல்படவும் தூண்டும்.

ஒருங்கிணைப்பு: ஸ்கிப்பிங் செய்வது உடல் உறுப்புகளுக்கு ஒருங்கிணைப்பை வழங்கும் செயல்முறையாகவும் அமையும். கண்கள், மூளை மற்றும் தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட உதவும். தினமும் அரை மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வது அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பு அடர்த்தி: ஸ்கிப்பிங் செய்வதால் எலும்பு சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்பது சுகாதார நிபுணர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஸ்கிப்பிங் செய்தபடி மேலும் கீழும் குதிக்கும்போது அனைத்து தசைகளும் தூண்டப்படும். அதனால் எலும்பு பலம் அதிகரிப்பதோடு எலும்புகளின் அடர்த்தியும் கூடும். எலும்புகளை சுற்றியிருக்கும் தசைகளும் பலப்படும்.

இதய ஆரோக்கியம்: ஸ்கிப்பிங் செய்வது சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். இது இதய செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். உடலில் ஸ்டெமினாவை அதிகரிக்க செய்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker