ஆரோக்கியம்புதியவை

சிறுநீரக கற்கள் உருவாவது ஏன்?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று. மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதை கண்டுபிடிப்பது இல்லை. சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இது சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் வலி கடுமையாகும். பெரும்பாலும் சிறிய கற்கள் சிறுநீரில் வெளியேறிவிடும். அது வலி, எரிச்சலை தருவதில்லை என்பதால் யாரும் இதை உணர்வதே இல்லை. சிறுநீரில் வெளியேற முடியாத பெரிய கற்கள்தான் வலியை ஏற்படுத்துகின்றன.

பொதுவாகவே சிறுநீரக கல் உருவாகும் நபருக்கு ஆரம்ப நாளில் எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக்கால அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீரின் நிறமும் மாறும். அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம். அத்துடன் உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இந்த நேரத்தில் வெளியேறும் சிறுநீரின் நெடி, ஆட்டு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும். இவையெல்லாம் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை எளிதாகும். நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.

இயற்கையில் காற்று, வெப்பச் சூழலில் மழைநீர் பட்டு நாளடைவில் பாறையாக மாறுவதைப் போல, நமது உடலில் உள்ள தோஷங்களில் ஒன்றான கபம் காரணமாகக் கற்கள் உருவாகின்றன. உடலில் பித்தம் காரணமாகச் சூடு ஏற்படுகிறது. வாதம் காற்றைப் போன்றது. சிறுநீர்த் தொற்றுக்கு ஆளானவர்கள் உணவுப் பழக்கத்திலும் குறிப்பாகத் திரவ உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடலில் உள்ள தோஷங்கள் பாதிக்கப்படும்போது சிறுநீரகத்தில் கல் உருவாகிறது.

பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது, இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.

பித்த உடல் வாகு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் உருவாகி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர். அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். அதிகப்படியான நேரம் மின்னணு பொருட்கள் மத்தியில் பணிபுரிவது மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்றவையும் சிறுநீரகக் கல் உருவாக வழிவகுக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker